நிறைவேறாத ஆசை

பத்துமாசம் சுமந்து என்னை

பாசத்தோடு பெத்தவளே

உதிரத்தை உருமாற்றி

உணவாக கொடுத்தவளே

உணவல்ல அதுதாயி

உசிருன்னு தெரியாதா

பிஞ்சு காலுக்குதான்

வெள்ளி கொலுசு ஒன்னு

வேணுமின்னு ஆசைப்பட்டு

தங்கத் தாலியைத்தான்

அடகு வச்சவளே

மஞ்ச கிழங்காலே

மறைச்சுகிட்டு தவிச்சியே

ஆத்தா தவிச்சாலே

புள்ள அழுவான்னு தெரியாதா

பச்சரிசி சுடுசோறு செஞ்சு

பக்குவமா பருப்பை போட்டு

நெய்யையும் கலந்துவிட்டு

நிலாகாட்டி ஊட்டிடுவ

பழைய கஞ்சி குடிச்சிகிட்டு

பாதி வயிற்றில் நீ கிடப்ப

சுடுசோறை நீ மட்டும்

திருவிழாவில் தானே சாப்பிடுவ

உனக்காக ஓர் செருப்பை

நீ வாங்கி போட்டதில்லை

வெறுங்காலில் நான் நடக்க

ஒரு நாளும் விட்டதில்லை

ஆசைப்பட்ட எல்லாத்தையும்

பார்த்து பார்த்து செஞ்சவளே

உனக்கு முன்னாடியே

உசிர விடனுமின்னு

உன் புள்ள ஆசையைத்தான்

அறிஞ்சுக்காம போயிட்டியே

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (19-Jul-16, 7:36 pm)
Tanglish : niraiveraatha aasai
பார்வை : 468

மேலே