குற்றமும் தண்டனையும்
அன்று குற்றமிழைத்தால்
நாடு கடத்துவார்கள்.
இன்று தாமாகவே
நாடு கடத்திக்கொள்கிறார்கள்.
- மல்லையா.
ஆயுதம் செய்வோம்
அதுவே குற்றமெனில்
தண்டனை கொள்வோம்
காலங்கழிந்து மீண்டு
வருவோம், புதுப்பித்துக்கொண்டு
நல்லவராக.
- சஞ்சய் தத்
இனக்கொலை உலகெங்கும் நடந்தாலும்
இந்தியாவுக்கென்ன, அது எல்லை பிரச்சனை!
இனம் மாறி மட்டும் திருமணம் செய்து விட்டால்
கவரவக்கொலை அதில் கர்வம் கொள்வதற்கு!
காதலிப்பது இனி குற்றமில்லை,
காதலிக்காமல் இருந்தால் தான்
அது குற்றம், கழுத்தறுக்கப்படும்
காண்பவர் யாவரும் குருடாவார்!
மேல்ஜாதி கீழ்ஜாதி சண்டையெல்லாம்
இங்கே தீக்கிரையாகும் - இல்லையேல்
மாவோயிஸ்ட்டால் துவம்சம் செய்யப்படுவர்.
நல்ல பையன் நாட்டைக் காப்பாற்றாமல்
விடமாட்டான்.
கெட்ட பையன்களோ விலைக்கு வாங்கப்பட்டு
வெடிகுண்டாக்கப்படுவர்,
நாடு அமைதியாய் மட்டும் இருந்து விடக்கூடாதென.
வெளிநாட்டில் என்னவோ ராணுவப்புரட்சி
தேசப்பற்று காரணமாக அது உடனே தடுக்கப்பட்டு
செய்தியானது;
எங்கள் நாட்டிலோ மன்னர்களுக்கு மட்டுமே
அப்படி ஒரு பாதுகாப்பு.
மக்களுக்கு, கேட்கவே வேண்டாம்.
வழிப்பறி, கொலைக்கொள்ளை இல்லாதிருந்தால்
அன்று ஏதோ ஒரு அமாவாசையாக இருக்கலாம்.
யார்யார் காலத்திலோ வாழ்ந்த நமக்கு
இப்பொழுது
இதுதான்
விதிக்கப் பட்டுள்ளது!