தினம் ஒரு தத்துவ பாட்டு - 26 = 168

“கண்ணில்படுவதை கவரநினைப்பவன் கண்ணியம் குறைந்தவன்
கன்னிசிரிப்பதை காதல்என்பவன் பெண்ணியம் மறந்தவன்
எண்ணிக்கொண்டதை எளிதில்முடிப்பவன் புண்ணியம் செய்தவன்
தண்ணீயடிப்பதை நிறுத்திவிட்டவன் நன்னிலம் சிறந்தவன்

சொல்லிச்சென்றதை உடனேசெய்பவன் செயலில் வல்லவன்
அள்ளிக்கொடுப்பதை அளந்துகொடுப்பவன் வள்ளலில் நல்லவன்
கள்ளிச்செடியை களையெடுப்பவன் தொழிலில் தூய்மையானவன்
தள்ளிச்செல்பவரை விலகிநிற்பவன் வாழ்வில் நேர்மையானவன்

அவசரப்பட்டு முடிவுஎடுப்பவன் அறிவுக்கு நேர்எதிரானவன்
தட்டிக்கொடுத்து வேலைவாங்குபவன் வெற்றிக்கு பேர்போனவன்
துட்டுக்கொடுத்து காரியம்முடிப்பவன் தன்கையால் ஆகாதவன்
துட்டுப்பெற்று காரியம்முடிப்பவன் வாயால் அதிகம் பேசாதவன்

அடையாததை அடைவதாகக் கூறுபவன் வறட்டு வேதாந்தன்
முடியாததை முடிப்பதாக மார்தட்டுபவன் முரட்டு சுபாவன்
படிக்காததை படித்ததாக பறையடிப்பவன் வெற்று ஆர்பாட்டன்
பிடிக்காததை பிடித்ததாக பிதற்றுபவன் பற்றுக்கு பெரியப்பன்

அதிகாரம் கையிலிருப்பதால் ஆடுபவன் நாட்டுக்கு அபத்தன்
சதிகார கூட்டத்திலிருந்து விடுபடாதவன் வீட்டுக்கு ஆபத்தன்
பரிகாரம் தேடிக்கொள்ளாதவன் பாவத்தின் மொத்த அவதாரன்
அரிதாரம் அப்பி நடிக்காதவன் நவரசத்தின் சுத்த கலைகூத்தன்

மாட்சியில்லாமல் ஆட்சிசெய்பவன் மக்களின் அரக்கன்
சூழ்ச்சியில்லாமல் ஆட்சிசெய்பவன் மக்களின் பக்தன்
வீழ்ச்சியில்லாமல் வெற்றித்தருபவன் மக்களின் தலைவன்
அயர்ச்சியில்லாமல் உழைக்கின்றவன் மக்களின் ஏகலைவன்

இலக்கணப் பிழையின்றி எழுதுபவன் இலக்கியத்தில் இமயன்
இலக்கியத்தை அலட்சியம் செய்பவன் படைப்புலகின் மடையன்
கணப்பொழுதும் சிந்தனையில் ஆழ்பவன் எழுத்துலகின் பிரம்மன்
மரணமகள் தழுவினாலும் புகழ்குன்றாதவன் மண்ணுலகின் கொம்பன்

கவிப்பறவையின் சிறகில் அமர்ந்தவன் இறவாப்புகழ் கவிஞன்
புவிப்பறவையின் சிறசில் அமர்ந்தவன் புகழ்குன்றா அறிஞன்
மனச்சலனங்களை முடக்கி வைப்பவன் ஆசைவிரும்பா புத்தன்
ஐம்புலன்களை அடக்கி ஆள்பவன் அகம்விரும்பா சித்தன்

எழுதியவர் : சாய்மாறன் (20-Jul-16, 6:07 pm)
பார்வை : 157

மேலே