மரம்

பொற்பத நிறத்தில் பூக்கள்
அவை
அற்புத மரத்தின் அன்பளிப்புக்கள்

மரம் தன்னை அறுக்கும்
அரத்திற்குக்கூட கைப்பிடியாகின்றது
இது மரத்தின் அறம்

மணல்தன்னைச் சரியாமல்
கைப்பிடித்துக்கொள்கின்றது
இது மரத்தின் கரம்

மரம் தன் மனதைக் கொத்தும்
மரங்கொத்திக்கு வீடு தருகின்றது

தன் மலரைக் கொத்தும்
சீட்டுக்கு பட்டுக் கூடு தருகின்றது

தன் நரம்புகளைக் கிழிக்கும்
தூக்கணாங் குருவிக்கு தூளி தருகின்றது

இது மரத்தின் சிரம்

புத்தனுக்கு அறத்தடி தராத
ஞானத்தை மரத்தடி தந்தது

மரத்தின் உயிர்க்கிளைகள்
தவழ்கின்றன உயர்வெளியில்
உமிழ்கின்றன உயிர்வளியை
பொறுக்கின்றன நாம் தரும் வலியை

அவை காயங்கள் சுமந்து
நமக்கு காய்களைத் தரும் தாய்கள்
கனிகளைத் தரும் புனிதக் கன்னிகள்

தாவரங்கள் நமக்கு உணவையும்
உணர்வையும் அள்ளிக்கொடுக்கும்
மா வாரங்கள்

இது மரத்தின் வரம்
இந்த மரங்கள் தான் ஆகின்றன
மண்ணுக்கடியில் வைரம்

காய்கறி நிலக்கரி
இவை மரத்தின் தறி
இதற்காக அவை கேட்பதில்லை வரி

மரங்கள் நிழல் தந்து
களைப்பாற்றும் சுரங்கள்

மழையை மண்ணுக்கு இழுக்கும்
பச்சை காந்தங்கள்

காற்றை காசின்றி தரும்
பிச்சைப் பாத்திரங்கள்

காட்டில் தொட்டில் வேண்டுமா
வெட்டுகின்றோம்
மரத்தினைக் காட்டில்
மரமோ பிறருக்கு உதவ
தன் கரத்தை அதிகமாய் நீட்டுகின்றது
மனிதனைக்காட்டில்

மருத்துவத்தின் மகிமையினும்
மேலான மரத்தின் மகத்துவத்தை
சொல்ல தமிழில் உண்டோ வெண்பா
இதுதான் மரத்தின் நிலை நண்பா

இறைவா
வரமாக வேண்டும்
மறுபிறப்பில் நான்
மரமாக வேண்டும்

மரங்களைக் காப்போம்

எழுதியவர் : குமார் (21-Jul-16, 12:13 am)
Tanglish : maram
பார்வை : 3905

மேலே