வர கவி வீர கவி------தமிழ் அமுதம் படித்ததில் பிடித்தது --
என் உயிர் தமிழ் மக்களே
வர கவி வீர கவி
காணி நிலம் கேட்ட மீசைக் கவி என்னைப் பாடாய் படுத்துகிறான். இத்தனை காலமா என்னைப் பற்றி எழுத என்று !
"அடேய் ! என்னிடம் கற்றுக்கொண்டு விட்டு என்னையே மறந்தாயா ? என் பராசக்தியின் பக்தனாகி இருந்து விட்டு என் எழுத்தை மறந்தாயா ? " என்றெல்லாம் என் கனவில் அந்த பைத்தியக்கார கவிஞன் உறுமினான்.
"ஐய! இது என்ன அபசாரம்! நீ சரஸ்வதியின் அவதாரமல்லவா? என் கண்ணனை நீ குழந்தையாக, பணியாளனாக, காதலனாக, காதலியாக, தாயாக, நண்பனாக கண்டவனல்லவா ? நீ கீதைக்கு உரை எழுதிய ஞானியன்றோ ? " நான் உன்னை
மறப்பதாவது ! ஆங்கிலம் என் தொழிலையும் எழுத்தையும் ஆட்டுகிறது . சற்றே அசதியால் இருந்து விட்டேன். என்னை மன்னி." என்று கூறி சினம் ஆற்றினேன்.
என் அன்பு வாசகர்கள் நான் யாரைப் பற்றி எழுதுகிறேன் என்று ஊகித்திருப்பர். ஆம் ! அவன் தான் தமிழ்த் தாய்க்கு செல்ல மகன்! பாரதி !! 38 வயதிலேயே உடற்கூட்டை விடுத்து சென்று விட்ட அவசரக்காரன் !
அந்தச் சிறு ஆயுளிலே அவன் செய்து காட்டியது எத்தனை ? எழுதிக் காட்டியது எத்தனை ?
சில வாரங்களுக்கு முன் என் சிறிய மகன் பள்ளியில் கற்றுக்கொண்ட பாடல் ஒன்றைப் பாடிக்காட்டினான். இதோ அந்தப் பாடல்
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப்பூம்
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனையின்றி பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !
நம்புவதே வழியென்ற மறைதனை நாம் இன்று நம்பி விட்டோம்
கும்பிட்ட நேரமும் சக்திஎன்றால் உனைக் கும்பிடுவேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
வெள்ளை மலர் மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்
தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதென்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்திவேல் சக்திவேல் சக்திவேல் !
இந்தப்பாட்டை எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிக் . கானம் கேட்கவேண்டும் என்னாசான் பாரதியின் வேகமும் பக்தியும் இதில் தழும்பும். அவன் நிறை குடம். தன்னை அடுத்தவர்கவளுடைய இதயப் பாத்திரத்திலே அவன் நிரப்பினானே தவிர , அவன் யாரையும் அறிவுப்பிட்சைக்காக அண்டியதில்லை.
அவனுடைய தீர்க்க தரிசனம் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருகிறது.
" ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்"
" வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்"
" சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம்"
" சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"
இந்தப் பட்டியல் பெரியது. பாரதியின் மனதைப் போல. இதில் சில நிறைவேற வேண்டும். இன்றைய தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பதர்களைப் பார்த்தால் பாரதி ரௌத்திரம் அடைந்து ஆயுதமே எடுத்து விடுவான்.
பார்ப்பனனாய்ப் பிறந்தும் கழுதைக் குட்டியை ஆசையாய் கட்டிக்கொண்ட ஆள் அவன். இன்றைய ஜாதி சார்ந்த கட்சிகளையும் அதில் அவர்கள் நடத்தும் இட ஒதுக்கீட்டு அரசியலையும் பார்த்தால் தன் கவிதை ஆகிய அக்கினிக் குஞ்சால் நாட்டையே எரித்து விடுவான்.
" பாருக்குள்ளே நல்ல நாடு, இந்த பாரத நாடு " என்று அவன் பாடிய நேரம் பொய்யாகுமோ ? வாழ்வாங்கு வாழ்ந்தவனல்லவா ? இன்று தெய்வமாகி நின்று நம்மை ஏளனமாகப் பார்ப்பானோ ? நினைக்கவே கூசுகிறது.
இன்று அவனிடம் கனவில் ஒன்று கேட்கப் போகிறேன். " ஐய ! நீ மீண்டும் பிறந்து வர வேண்டும். கவிதை மழை பொழிந்து தமிழ்த் தாய் மனது குளிர வேண்டும். " ஏற்பானா ?