வாழ்க்கையின் தூரங்கள்

கருவறையை தாண்டித்தான் வெளி வந்து
--------- கண்விழித்தே உலகத்தை காணும் முன்பே
உருவமது பெண்ணாகி போன தனால்
--------- ஒப்பாரி வைப்பதும் உடனுக் குடனே
கருணையின்றி அழித்திட்டே அடுத்த வேலை
--------- கவனிக்கும் சமுதாயத்தின் கசடாக இருந்து
உருவங்களாய் உலவுகின்ற உள்ளத்தின் கோடியிலே
---------ஒதுங்கியே நிற்குதுபார் வாழ்க்கையின் தூரங்கள்

வைகறை பொழுதினில் புறப்பட்டே சென்று
--------- வல்லூறுகளின் பார்வையிலே தப்பி போய்
கையறு நிலையாய் பேருந்தில் இடிபாடுகளில்
--------- கசங்கிடும் பெண்களின் நிலைதான் அந்தோ
வயிற்றுக்குதான் இந்தபாடு என்றே நினைத்தே
--------- வாய்பேசா ஊமைகளாய் காலந் தள்ளி
கயிற்றின்மேல் நடப்பதென வாழ்ந்து வரும்
--------- கன்னியர்தம் வாழ்க்கையே தூரமோ தூரங்கள்

விழிகள் தன்னிலே கவலையை தேக்கி
--------- காலமெலாம் காத்துநின்றும் வரன் கிட்டா
மொழிபேசா ஊமையாய் உள்ளத்துள் புழுங்கி
மோகமெனும் முள்தைத்தே முழுவது மாய்
அழகொழிந்து அங்குமிங்கும் அலைக் கழிந்தே
ஆடிக்காற்றில் பறக்கின்ற சிறுதுரும் பாய்
வீழ்ந்தேவீணாக உளமுடைந்து கண்ணீர் மல்கும்
-------- விரகத்தின் முதிர்கன்னி வாழ்க்கையே து}ரங்கள்

ஏர்தூக்கி உழவுசெய்தும் உடலுழைப்பே மிஞ்சி
--------- ஏதுமில்லை என்றேதான் கைவிரித்து காட்டி
பாருங்கள் எம்நிலைமை என்றே இயம்பும்
--------- பாங்கான உழவர்களின் வாழ்க்கையே தூரங்கள்
சீராகவே தொழிலாற்றி சேர்த்து வைத்த
--------- செல்வத்தையும் அதனில் இட்டே என்றும்
நேர்வழியில் சென்றிடும் வணிகர்தாம் ஏற்றிடும்
--------- நெடுந்தொல்லை ஏராளம் வாழ்க்கையே தூரங்கள்

நெல்விளையும் பூமியெல்லாம் நீரின்றி தரிசாய்
--------- நின்றதனால் அதனையே கட்டாந் தரையென
சொல்லியே மனைகளாய் பிரித்தே விற்றால்
--------- சோற்றுக்கு பஞ்சம்தான் வாழ்க்கையின் தூரங்கள்
புல்லும்தான் விளையாத பூமிதன்னில் தேடியே
--------- போகின்ற கால்நடைகள் பசியையும் போக்கி
அல்லும்பகலும் அயராது உழைத்தும் ஏதுமின்றி
--------- அல்லாடும் மக்களின் வாழ்க்கையே தூரங்கள்
---கே. அசோகன்

நன்றி- தினமணி -கவிதைமணி

எழுதியவர் : கே. அசோகன் (25-Jul-16, 8:35 pm)
பார்வை : 240

மேலே