மன்னிப்பாயா

'இன்றோடு முழுதாக இரண்டு மாதங்கள் ராகவியுடன் பேசி ' எண்ணும் பொழுதே கோபமாக வந்தது திவாகரனுக்கு. கூடவே கொஞ்சம் ஏக்கமாகவும் இருந்தது. திருமணமாகி இத்தனை வருடத்தில் மாதக் கணக்காக ராகவியுடன் பேசாமலிருப்பது இதுவே முதல் தடவை. அவளும் தான் எத்தனையோ தடவை மன்னிப்பு கேட்டு விட்டாள். ஆனால் மன்னிக்கத் தான் மனம் வரவில்லை. 'பின்னே அவள் எப்படி அத்தனை பேர் முன்னாடி தன்னை அவமானப்படுத்தலாம்?' மனம் மீண்டும் மீண்டும் ராகவி தன்னை அவமானப்படுத்திய இடத்திற்கே சென்று வந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக திவாகரன் , ராகவி தம்பதியரின் பத்தாவது திருமண நாளில் நெருங்கிய உறவினர்களையும் இருவரது நண்பர்களையும் வீட்டில் விருந்திற்கு அழைத்திருந்தார்கள். விருந்திற்கு அவனது அலுவலக நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். அதில் பெண்களும் அடக்கம். அண்மையில் புதிதாக அவர்களது குழுவில் இணைந்திருந்த மோனா என்ற பெண்ணும் வந்திருந்தாள். ஆண் , பெண் பேதமின்றி எல்லோருடனும் நெருங்கிப் பழகுபவள். அணைப்பு , முத்தம் இவையெல்லாம் அவளுக்கு வெகு சாதாரணம். அன்றும் அதுபோலவே திவாகரனுக்கு திருமண வாழ்த்தை கூறிய வண்ணம் அவனை அணைத்து இதழில் முத்தமிட்டாள். திவாகரனுக்கே அது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அவன் அவளை விலக்கி நிறுத்துவதற்கு முன்பாக ராகவியின் கண்களில் இந்தக் காட்சி பட்டு விட்டது.
அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நொடி உலகமே அசைவற்று நின்று விட்டது போல் தோன்றிற்று. மறுநொடி சுறு சுறுவென கோபம் தலைக்கேறியது. தனக்கே தனக்கானதை இன்னொருவரிடம் பகிர்வது போல் ஒரு உணர்வு தோன்றி அவள் மூளையை மழுங்கடித்து விட்டது. சுற்றியிருந்த உறவினர்களும் நண்பர்களும் அவள் கண்களுக்குப் புலப்படவில்லை. திவாகரனும் அவனை அணைத்தவாறு நின்றிருந்த மோனாவுமே அவள் கண்களுக்கு தெரிந்தார்கள். வேகமாக அவர்கள் அருகில் சென்றவளை திவாகரன் மோனாவுக்கு அறிமுகப்படுத்த முனைந்த வேளையில் அவன் கன்னத்தில் ராகவியின் கை படிந்திருந்தது. அவள் நெஞ்சமோ உலை என கொதித்துக் கொண்டிருந்தது. முத்தம் கொடுத்தவள் மேல் இருந்த கோபத்தை விட 'இவன் எப்படி அந்த முத்தத்தை ஏற்கலாம்' என்கிற ஆத்திரமே அவளை ஆக்கிரமித்திருந்தது. சுற்றியிருந்தோர் எல்லோர் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி. திவாகரனுக்கோ அவமானத்திலும் கோபத்திலும் முகம் சிவந்திருந்தது. ராகவியோ இவை எதையுமே பொருட்படுத்தாமல் விறு விறுவென மாடிப்படிகளில் ஏறி மேலே இருந்த அறைக்குச் சென்று கதவடைத்தாள்.
அவளது பெற்றோர் , குழந்தைகள் , தோழிகள் என் யார் சென்று கதவைத் தட்டியும் அவள் திறக்கவேயில்லை. விருந்திற்கு வந்திருந்தோர் எல்லோரையும் அவள் பெற்றோரும் திவாகரனின் பெற்றோருமே கவனித்து அனுப்பினர். எல்லோரும் வருத்தமான ஒரு முறுவலோடு விடைபெற்றுச் சென்ற போது மகளின் செயலை எண்ணி வெட்கமாக இருந்தது அவள் அன்னைக்கு. "என்ன கோபம் இருந்தாலும் இப்படியா எல்லோரையும் அவமானப்படுத்துவது போல் நடந்து கொள்வது? எல்லாம் அவளுக்கு செல்லம் குடுத்து வளர்த்த உங்களைச் சொல்ல வேண்டும்" என்று கணவனிடம் பாய்ந்தார். அவருமே மகளின் செயலால் அதிருப்தி அடைந்திருந்தாராகையால் எதுவுமே பேசாது அமைதியாய் இருந்தார்.
திவாகரனின் பெற்றோர்களுக்கோ என்ன செய்வது என்று தெரியாத சங்கடமான நிலை. மருமகளின் நல்ல குணம் தெரிந்த அவர்களால் அவளை திட்ட முடியவில்லை. மாறாக இது எதுவுமே புரியாமல் வீட்டினர் முகத்தை பார்த்த வண்ணமிருந்த பேரப்பிள்ளைகளை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். திவாகரனோ யார் முகத்தையும் பார்க்க பிடிக்காதவன் போல் வெளியே கிளம்பிச் சென்று விட்டான். அவன் சென்றதும் அவள் அறைக்கதவை திறக்கச் சொல்லி அவள் அன்னை எவ்வளவு திட்டியும் எந்தப் பதிலுமே அவளிடமிருந்து வரவில்லை. இப்படியாக இரண்டு நாட்களுக்கு யார் முகத்தையும் பார்க்கும் தைரியமற்று அறையினுள்ளேயே அடைந்து கிடந்தாள்.
இரண்டு நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் மயங்கி விடுவோமோ என்று பயந்து வெளியே வந்தவள் யாரும் இல்லா நேரம் பார்த்து சமையல் அறைக்குள் பூனை போல் பதுங்கி சென்று தட்டில் சாப்பாட்டை நிரப்பிய வேளை திவாகரன் தண்ணீர் குடிப்பதற்காக உள்ளே வந்தவன் திருட்டு முழியோடு பயந்து போய் தன்னை நோக்குபவளை கண்டு சிரிப்பு வந்த போதும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் தண்ணீர்ப் போத்தலை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டான். அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவனது உருவம் பார்வைக்கு மறைந்ததும் " இவனைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். எங்கே போய் விடப் போகிறான். நான் இப்போது சாப்பிடா விட்டால் பரலோகம் போக வேண்டியது தான்" என்று முணுமுணுத்தவாறே சாப்பிட ஆரம்பித்தாள்.
சரியாக இவள் சாப்பிட்டு முடித்ததும் எங்கிருந்தோ வந்த அன்னை வசை மழையில் அவளை நனைத்து விட்டார். நல்ல வேளையாக அவள் அதில் மூழ்குவதற்கு முன்பாக அத்தையும் மாமாவும் வந்து காப்பாற்றி விட்டனர். அதற்குப் பிறகு மேலும் இரண்டு நாட்கள் இருவரது பெற்றோரும் இவர்களுடன் தங்கி விட்டு தங்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். போகும் முன்பாக அவர்கள் சொன்ன அறிவுரையில் தன் தவறை முழுதாக உணர்ந்தவள் கணவனிடம் சென்று மனிப்பு கேட்டாள். அன்றிலிருந்து கடந்த இரண்டு மாதங்களாக அவனிடம் மன்னிப்பு வேண்டுவதையே முழு நேரத் தொழிலாக்கிக் கொண்டாள். அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒருவிதமாக மன்னிப்பை வேண்டிய வண்ணமேயிருந்தாள். கெஞ்சிப் பார்த்தாள். கொஞ்சிப் பார்த்தாள். குழந்தைகளையும் தூது விட்டாள். காலில் விழாதது ஒன்று தான் குறையாக எப்படி எப்படி எல்லாமோ மன்னிப்பு கேட்டாள். எதற்குமே அவன் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியாக அலுத்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. கடந்த நான்கு நாட்களாக அவனிடம் எந்த விதத்திலும் பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்ளவில்லை. ஏன் இந்த நான்கு நாட்களாக கண்ணில் கூடப் படவில்லை.
ஏதேதோ எண்ணங்களில் மூழ்கியிருந்தவனை அழைப்புமணிச் சத்தம் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. கடிகாரத்தில் நேரம் ஒன்பது மணியைக் காட்டிக் கொண்டிருந்தது. 'இந்த இரவு நேரத்தில் யாராயிருக்கும்?' என்ற எண்ணத்தோடு கதைவைத் திறந்தவனுக்கு எதிரில் சோர்வாய் தலையைப் பிடித்த வண்ணம் நின்றிருந்த மனைவியின் உருவம் தான் தெரிந்தது. 'நாடு இருக்கும் நிலையில் இந் நேரத்தில் எங்கு போய் விட்டு வருகிறாள்?' என்று மனதில் தோன்றிய கேள்வியை மனதிலேயே புதைத்து விட்டு மீண்டும் பழைய இடத்திலேயே சென்று அமர்ந்தான். ராகவியும் எதுவும் பேசாமலே உள்ளே வந்து 'குழந்தைகள் சாப்பிட்டு விட்டார்கள்' என்பதை சாப்பாட்டு மேசையில் சிந்தியிருந்த உணவுப் பொருட்களை பார்த்தே உறுதி செய்து விட்டு குளியலறைக்குள் சென்றாள். குளித்து உடைமாற்றி பசித்த வயிற்றை உணவு கொண்டு நிரப்பி விட்டு குழந்தைகளுக்கு அருகிலேயே வந்து படுத்துக் கொண்டாள். நான்கு நாட்கள் அலைந்து திரிந்து களைத்திருந்த உடல் ஓய்வை வேண்ட சீக்கிரமே கண்ணயர்ந்து விட்டாள்.
திவாகரன் தான் தூக்கமே வராமல் அறையின் நீள அகலங்களை அளந்து கொண்டிருந்தான். இரண்டு மாதங்களாக இது ஒரு வேதனை. மனைவி , குழந்தைகள் இல்லாமல் தனியாக தூங்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. குழந்தைகள் அருகிலாவது தூங்கலாம் என்றால் அம்மா இல்லாமல் தூக்கம் வராது அவர்களுக்கு. 'அவர்களுக்கு மட்டுமா எனக்கும் கூடத் தான் அவளில்லாமல் தூக்கம் வரத்து.' புலம்பும் மனதை அடக்கி நித்திரையில் ஆழ்ந்து கொண்டிருந்தவனுக்கு எங்கோ தூரத்தில் ஏதோ பாடல் ஒலிப்பது போல் கேட்டது. மெல்ல மெல்ல அந்த ஒலி பக்கத்தில் கேட்பது போல் தோன்ற சிரமப்பட்டு கண்ணை திறந்தவன் தனது கைப்பேசியை முறைத்தவாறே காதில் வைத்து, "என்னடா வேணும் உனக்கு இப்ப? நானே இப்ப தான் வராத தூக்கத்தை வரவச்சேன். அதுக்குள்ள எழுப்பிட்டியேடா பாவி!" கோபமாகக் கத்தினான்.
எதிர்முனையில் அவனது உயிர் நண்பன் உதய் அவனுக்கும் மேலாக கத்தினான், "என்னது தூங்கிட்டிருக்கியா நாயே?"
அவன் கேள்வியில் கடுப்பான திவாகரன் "அறிவுகெட்ட முண்டமே! ராத்திரில தூங்காம கபாடியா விளையாடிட்டிருப்பாங்க? கேக்குறான் பாரு கேள்விய?"
"ச்சே.... நீ என் தங்கச்சி கூட 'romance' பண்ணிட்டு இருப்பா, கரடி மாதிரி அதை கலைக்கலாம்னு பாத்தா இப்பிடி என்ன ஏமாத்திட்டியேடா?"
"டேய் உனக்கு எப்படா தங்கச்சி பொறந்தா? சொல்லவே இல்ல!"
"எருமை! எருமை! ஆசையப் பாரு. நான் என் தங்கச்சின்னு சொன்னது ராகவிய."
"அது எங்களுக்கும் தெரியும். பேச்சுக்கே வழியில்ல. இதுல 'romance' பண்ணாதது ஒண்ணு தான் குறைச்சல்."
"டேய் இன்னுமாடா உனக்கு அவள மன்னிக்கணும்னு தோணல?"
"மன்னிக்கிற மாதிரியான காரியமா அவ பண்ணா? office ல எல்லாரும் என்ன எப்பிடி பார்த்தாங்கன்னு உனக்கு தெரியாதாடா?" கோபமும் வருத்தமுமாக திவாகரன் பேச , "ராகவி உன்கிட்ட ஒண்ணுமே சொல்லலையாடா?" கவலையாக வினவினான் உதய். "என்ன சொல்லணும்?" புரியாமல் கேட்டான் திவாகரன்.
"ராகவி நம்ம friends எல்லாருக்கும் இன்னிக்கு ஒரு party வச்சிருந்தாடா. அதில எல்லார் முன்னாடியும் அன்னிக்கு அவ அப்படி நடந்துக்கிட்டதுக்கு மன்னிப்பு கேட்டா. மோனா கிட்ட மன்னிப்பு கேட்டப்ப ராகவிக்கு கண்ணு கலங்கிடிச்சுடா? அவ அழுகைய அடக்கிக்கிட்டதப் பாத்து எனக்கு மனசு தாங்கலடா." உதய் சொல்ல சொல்ல திவாகரனால் தாங்கிக்கவே முடியவில்லை. என்னதான் தன் மனைவி தப்பே புரிந்திருந்தாலும் மூணாவதா ஒருத்தர்கிட்ட மன்னிப்பு வேண்டியது அவனுக்கு வேதனையை அளித்தது. அந்த வேதனையிலும் அவனுக்கு மகிழ்ச்சி பெருகிற்று. தன் மனைவி தனக்காக தன் தன்மானத்தை விட்டு என் நண்பர்களிடம் மன்னிப்பை வேண்டியிருக்கிறாள். எல்லாம் எதற்காக? எனக்காக...நான் பழையபடி அவளுடன் பேச வேண்டும் என்பதற்காக!' நினைக்க நினைக்க மனைவி மேல் காதல் பெருகிற்று. அவளை உடனே பார்க்க வேண்டும் போல் ஒரு எண்ணம் தோன்ற "டேய் நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்." என்றவாறு நண்பனின் பதிலை எதிர்பாராமலே பேசியை வைத்து விட்டு மனைவியை நாடிப் போனான்.
தூங்கும் மனைவியின் முகத்தைப் பார்த்தவனுக்கு காதல் பெருகிற்று. கட்டிலுக்கருகில் நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து அவள் வயிற்றில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழுதான். வயிற்றில் ஏதோ பாரத்தை உணர்ந்து தூக்கம் கலைந்து எழுந்தவள், கணவன் அழுவதைப் பார்த்து "என்ன! என்னாச்சு? ஏன் அழுறீங்க?" என்றவாறே எழ முயன்றாள்.அவளை எழ விடாமல் அவள் அருகிலேயே கட்டிலில் அமர்ந்தவன் அவள் கைகளை தன் கண்களில் ஒற்றியவாரே, "என்னை மன்னிச்சிடுடா செல்லம். உன்னை ரொம்ப அழ வச்சிட்டேன்ல. நீ ஏன்டா என் friends கிட்ட மன்னிப்பு கேட்கணும். நீ என் மேல இருக்குற உரிமைல தானே அடிச்சா. அதப் புரிஞ்சுக்காம நான் தான் உன்ன அழ வச்சிட்டான், sorry டா கண்ணம்மா." குழந்தையை கொஞ்சுவது போல் கொஞ்சி மன்னிப்பு வேண்டுபவனைப் பார்த்து பொங்கிய ஆனந்தத்துடன் இறுக்கி அனைத்துக் கொண்டாள். "நீங்க ஏங்க மன்னிப்பு கேக்குறீங்க? பட்டிக்காடு மாதிரி நடந்துக்கிட்டது நான். அதனால தான் எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டன். நீங்களும் என்ன மன்னிச்சிடுங்க?" அழுது கொண்டே அவனிடம் வேண்டினாள்.
"யாரு பட்டிக்காடு? எம் பொண்டாட்டிய பட்டிக்காடுன்னு சொன்னா பல்ல தட்டிடுவன் பாத்துக்க." சிரிப்பும் அழுகையுமாய் அவனை நோக்கியவளை தன்னுள்ளேயே புதைத்து விடுபவன் போல் இறுக்கினான். இவர்கள் இருவரது பேச்சு சத்தத்தில் லேசாய் சிணுங்கிய குழந்தைகளை கண்டு இருவரும் ஒரே நேரத்தில் வாயில் வாயில் விரல் வைத்து சிரித்தார்கள்.
இனி எல்லாம் சுபமே என்று நாமும் அங்கிருந்து வெளியேறுவோம். இல்லையென்றால் அடித்து துரத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு முன்பாக நாமே சென்று விடலாமே !

எழுதியவர் : துவாரகா (27-Jul-16, 9:48 pm)
Tanglish : mannippaayaa
பார்வை : 777

மேலே