இந்த ஆளுதான்
அது ஒரு மலைப் பிரதேசம். நல்ல இருட்டு நேரம். கடுமையான மழை. முருகேசு பஸ் ஸ்டாப்பில் சிக்கிக்கொண்டிருந்தார். யாருமே சாலையில் நடமாடவில்லை. பஸ் ஒன்றும் வருவதாகத் தெரியவில்லை.
ஏதாவது கார் வந்தால் லிஃப்ட் கேட்டு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஒரு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது பஸ் ஸ்டாப் அருகில் நின்றது.
முருகேசுவுக்கு யோசிக்க நேரம் இல்லை. கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்தார். கார் மீண்டும் மெதுவாக நகர ஆரம்பித்தது.
அப்பொழுதுதான் முருகேசு கவனித்தார், டிரைவர் சீட்டில் யாருமே இல்லை. ஆனால் கார் நகர்ந்துகொண்டே இருக்கிறது. முருகேசுவுக்கு பயம் தலையிலிருந்து கால்வரை ஊசி போட்டது.
சாலையில் 90 டிகிரி திருப்பம். எதிரே கிடுகிடு பள்ளம். நாம் நிச்சயம் காரோடு சமாதி. செத்தோம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் காரின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஒரு கை உள்ளே நீண்டு ஸ்டீரிங்க் வீலை திருப்பியது.
பயத்தின் உச்சத்துக்கு சென்ற முருகேசு, கார் கதவைத் திறந்து வெளியே குதித்தார். கொஞ்ச தூரத்தில் இரு ஹோட்டல் தெரிந்தது. ஒரே ஓட்டமாக அங்கே சென்றார்.
“ஒரு கார் டிரைவர் இல்லாமல் வந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு பிசாசு வேலைதான். ரொம்ப பயமா இருக்கு” என்று ஹிஸ்டீரியா வந்தது போல கத்தினார்.
ஹோட்டலில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் வெளியே எட்டிப்பார்த்தனர். அந்த கார் மெதுவாக வந்து ஹோட்டலுக்கு முன்னால் நின்றது.
அதன் பின் பக்கத்திலிருந்து வெளிப்பட்ட இரண்டு மனிதர்கள் கருப்பு ரெயின் கோட்டொடு உள்ளே நுழைந்தனர்.
அவர்களில் ஒருவன் முருகேசுவை சுட்டிக்காட்டி, “இந்த ஆளுதான். ரிப்பேரான காரை நாம மழையில தள்ளிகிட்டு வரும்போது உள்ளே ஏறி உக்காந்தவன்” என்றான்.