தினம் ஒரு தத்துவ பாட்டு - 28=176
“உலகில் உழைப்பவனெல்லாம் உத்தமன் இல்லை
உழைப்பவனில் பாதிபேரே உண்மையின் பிள்ளை
மிதமிஞ்சிய கடின உழைப்பாளி எங்கள் தந்தை…
அவரைப்போல் உழைக்க எங்களால் முடிவதில்லை..”
அதிகாலை மணி நான்குக்கு எழுவார்
அன்று முழுதும் அலைகடலாய் உழைப்பார்
இரவு சுமார் மணி பத்துக்கு படுப்பார்
இடையிடையே விழித்து எங்களை பார்ப்பார்
இரும்பான தேகம் தினம் துரும்பாய் தேயுது
இரவென்றும் பகலென்றும் மெழுகாய் உருகுது
சொந்தமெல்லாம் எங்களை தள்ளிதான் வைக்குது
சல்லிக்காசு பெறாத சொந்தம் எமக்கேன் என்குது..
பணம் காசு இருந்தால்தான் பந்த பாசமா ?
பிணம்மேலும் பணமிருந்தால்தான் பாசம் வருமா ?
போகும்போது சொத்தையா கொண்டுப்போக போறோம் ?
சாகும்வரை மனுசனா வாழ்வதிலென்ன சோரம் ?
உறவுகளே பெரிதென்று எல்லோரும் சொல்வார் – அந்த
உறவுகளும் பொருளொன்றே குறியாக இருப்பார்..!
உடலெங்கும் நகையணிந்தவரை விழுந்துவிழுந்து கவனிப்பார்
ஒரு - கால்பவுனு அணியாதவரை ஏற இறங்க பார்ப்பார் !
போலி உறவுகளின் புல்லுருவி தனத்தால்
அப்பாவி என்தந்தை பலிகடா ஆனார்..!
தாலியில் தங்கம் இல்லாத காரணத்தால்
என்தாய் கூலிகாரனைவிட கேவலப்பட்டார்..!
கால்சட்டை பருவத்தில் ஒட்டுபோட்ட சட்டைதான்
ஒட்டுப்போட்ட சட்டையிலும் ஒன்பது ஓட்டையாம்
தீபாவளி தினத்தில்கூட தித்திப்பும் மத்தாப்பும் கிடைக்காது
ஆனாலும் என்தந்தை அடுத்தவரிடம் கடன் கேட்டவர் கிடையாது
பிள்ளைகள் நாங்கள் பெரியவர்கள் ஆனோம்
பெற்றவர்களின் சுமையை குறைப்பவர்கள் ஆனோம்
சுயமரியாதை சிங்கம் எங்கள் தந்தை ! – அவர் இறக்கும்
தருவாயிலும் பிள்ளைகளிடம் கையேந்தியதே இல்லை…!