பாடம்
என்னை விட ஆறு வயது கம்மியான ஆறுமுகத்தோடு
அவன் அழைத்ததின் பேரில் ஹோட்டலுக்கு சாப்பிட போன போது,
''என்ன வேணும்..?''என்று சர்வர் கேட்டதும்.
ஆறுமுகமும் என் பக்கம் திரும்பி ,''என்ன வேணும்..?''என்றான்.
''உன் விருப்பம்''என்று நான் சொன்னவுடன்,
ஆறுமுகமும் சர்வரிடம்,''உன் விருப்பம் ''என்று சொல்ல
எத்தனித்து,பின் தாடை தடவி யோசித்து...
''ரெண்டு புரோட்டா ..ஆப்பாயில்..ரெண்டு செட் ''என்றான்.
சாப்பிட அழைத்தது அவன்..காசு கொடுக்க போவதும் அவனே.
அதனால்,நம் விருப்பத்தை இங்கு சொல்லக்கூடாது என்கிற
நாகரீகத்தை கடை பிடித்த காரணத்தால்..
அவன் விருப்பத்துக்கு ஆர்டர் செய்த இந்த ஆப்பாயிலை
எப்படி எடுத்து முழுங்குவது என தெரியாமல்,
ரெண்டு புரோட்டாவை காலி செய்து,ஆப்பாயி லை சுற்றி விரல்களால் வட்டம் போட்டு,இலையில் ஒட்டிய குருமாவை
நக்கிய படி,
ஆறுமுகத்துக்கே தெரியாமல்,அவனது இலையை நோட்டம் விட்டேன்.
ஆப்பாயிலின் நான்கு புறத்தையும் மடித்து ,மிக லாவகமாய் தூக்கி ,சிந்தாமல்,சிதறாமல் அழகாய் அள்ளி உள்ளே போட்டுக்கொண்டான்.
அவனை தொடர்ந்து,அதே முயற்ச்சியில் நான் இறங்க,
அதுவரை பவுர்ணமி நிலா போல கிடந்த மஞ்சள் கரு ,
வெள்ளை மேகத்தை உடைத்துக்கொண்டு ,விரல்களிலிருந்து நழுவி,தொண்டைக்கு வெளியே இறங்கியது.
நல்ல வேளை..உடைந்த நிலா ,சட்டைப்பைக்குள் புகுந்து விடாமல்,தொண்டைக்குழியின் வெளி நிறுத்தி,
ஒரு வழியாய் சாப்பிட்டது போல் பாவ்லா காட்டி..
பாத்ரூமில் கை கழுவிய போது..மனதில் தோன்றியது..
அடுத்த முறை,எங்கே யாவது தேடி பிடித்து,
'ஆப்பாயில் சாப்பிடுவது எப்படி ?''என்கிற புத்தகத்தை வாங்கி
படித்த பிறகே,ஆறுமுகத்தோடு சாப்பிட வர வேண்டும் என்று.
(மீள்)