என்ன வாழ்க்கடா இது

தேகமெல்லாம் காலம்...
கோலமிட்ட வடுக்கள்!
முகமெல்லாம் தோல்விகள்...
முத்தமிட்ட பருக்கள்!

தீராத்தாகமாய் மனதினை...
ஆழ்த்தும் சோகம்!
எனதுடலோ! துன்பத்திற்கு...
இறைச்சியின் மோகம்!

நெஞ்சத்தில் எழும்...
வினாக்களோ! ஆயிரம்!
வாழ்வினில் காணும்...
கனாக்களோ! வெற்றுக்காகிதம்!

துளிர்க்கும் துளிஇன்பத்தினை...
தூக்கிலிடும் துக்கம்!
அரிக்கும் துன்பம் ஆறடி...
தோண்டுது பக்கம்!

சலசலக்கும் சஞ்சலங்கள்...
சங்கமிக்கும் நெஞ்சம்!
சந்திசிரித்து சமாதானமாகி...
உறங்கும் கொஞ்சம்!

அனுதினமும் ஆட்க்கொண்ட
கவலையே அறுசுவை விருந்து!
ஊமைக்காயங்கள் விதையூன்றிய...
மனதிற்கு அன்னை உறவே...
பல்சுவை மருந்து!

உறுப்புகளிருந்தும் உயிரை...
முடக்கும் வேதனை!
சிந்தையில் சிக்குண்ட சிக்கல்கள்...
கடக்கும் சாதனை!

பார்க்கும் திசையெல்லாம்...
பற்றிடும் வெறுப்பு!
காணும் காட்சிகளெல்லாம்...
உணர்த்தும் கசப்பு!

மேனியெங்கும் முளையிட்ட...
விரக்தியின் வித்துக்கள்!
கண்காட்சியில் பட்டொளிரும்...
கவலையெனும் முத்துக்கள்!

யான்பெற்ற பதினாறு...
செல்வங்களும் கஷ்டம்!
பாரினில் களையாய் முளைத்த...
நானொரு மானிடத்தின் நஷ்டம்!

வாழ்க்கை நூலினை புரட்டும்...
பக்கமெல்லாம் கவலைகளும்...
வேதனைகளுமே!

முன்னே! வைத்த ஓரடிக்கு...
முதுகில் விழுந்தது ஓராயிரம்...
கவலையின் சவுக்கடிகள்!
என்ன வாழ்க்கடா இது!

எழுதியவர் : Maniaraa (1-Aug-16, 10:20 am)
பார்வை : 425

மேலே