தனக்குத்தானே சரியாகிவிடும்

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.

புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.

ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்..

எழுதியவர் : செல்வமணி (2-Aug-16, 11:14 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 256

மேலே