செண்டூர் ~ பிரபாவதி வீரமுத்து

செந்தூர் மருவி
செண்டூர் ஆனதே
மயிலம்
முருகனின்
தாய்வீடே

விழுப்புரம்
மாவட்டத்தில்
மிகவும் பிரசித்தி பெற்ற
முருகன் தலம் மயிலமே
எங்கள் ஊரில் இருந்து
3 கிலோ மீட்டர்

எங்கள் ஊர்
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
திண்டிவனம்
விழுப்புரத்திற்கு
இடையில் உள்ளது

செண்டூர் ஊராட்சி
மயிலம் ஒன்றியம்
திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
மயிலம் சட்டமன்ற தொகுதியுமே
ஆரணி நாடாளுமன்ற
தொகுதி

பல்லவர்கள் ஆண்ட பூமி
எங்கள் ஊரில்
சுமார் 700 வருடங்கள் பழமை வாய்ந்த
பல்லவர்களால்
கட்டப்பட்ட பெருமாள்
கோவில்
உள்ளது
அதை புதுபித்து
சிறப்பாய் உள்ளது
அதுமட்டுமில்லாமல்
மிகவும் பழமையான
விநாயகர் கோவில்
ஒன்று இருந்ததற்கான
அடையாளம்
இருக்கிறது
ஆனால்
இன்று
அது மண்ணோடு
மண்ணாய்
புதைந்துள்ளது

எங்கள் ஊரில்
பிள்ளையாரும்
திரௌபதியும்
இணைந்து வீற்றிருக்கும்
பிள்ளையார் கோவில்
உள்ளது

திரௌபதி அம்மனுக்கு
பாரதம் பாடி
தீமிதிக்கிறோம்

சிவன் கோவில்
ஒன்று
உருவாகி வருகிறது

என் வீட்டருகில்
முத்து மாரியம்மன்
உறைந்திருக்கிறாள்

பக்கத்திலேயே
என் குலதெய்வம்
வீரபத்திரனும்
ஊரை காவல் காக்கிறார்

மயிலம் முருகனின்
தாயான
எல்லைத் தெய்வம்
பாவம் தீர்த்த மாரியம்மனும்
ஊரை காக்கிறாள்
செம்மையாக
அமாவாசை நாட்களில்
ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது

மயிலம் முருகன்
ஆடி பெருக்கு நாளில்
எங்கள் ஊருக்கு
வந்து
இலுப்பந் தோப்பில்
வீற்றிருந்து
பக்தர்களுக்கு காட்சி தருகிறார்
அன்று இரவு
தன் தாயிடம்
பிரியா விடை பெற்று
போகிறார்.

எங்கள் ஊருக்கு அருகில்
காமராசர் ஐயாவால்
கட்டப்பட்ட
வீடுர் அணையும்,
திருவக்கரை வக்கர காளியம்மன் கோவிலும்,
திண்டிவனம் திந்திரிணீஷ்வரர் கோவிலும்,
விழுப்புரம் வீரவாழியம்மனும்,
செஞ்சி கோட்டையும்,
மேல் மலையனூர் அங்காளம்மனும்,
மருவத்தூர் ஆதிபராசக்தியும்,
பஞ்சவாடி ஆஞ்சநேயரும்,
புதுச்சேரியும்,
திருக்கோவிலூர்
உலகளந்த பெருமாளும்,
பண்ருட்டி பலாவும்,
நெய்வேலி நிலக்கரியும்
உள்ளது.

எங்கள் ஊரில்
செண்டூர் மின் நிலையமும்,
சுகாதார நிலையமும்,
அரசு உயர்நிலைப் பள்ளி செண்டூர்,
தேவாலயமும்
தேசிய நெடுஞ்சாலையிலேயே அமைந்திருக்கும்

உயர் நிலைப் பள்ளி பேருந்து நிலையத்திலும்
அதாவது மயிலம் போற
வழியில்,
தொடக்கப்பள்ளி
என்வீட்டருகில்
கோவிலுக்கு பக்கத்திலேயே உள்ளது


பல்லவர்கள்
இந்த மண்ணை ஆண்டார்கள்.
மாமல்லபுரத்தை
தலைமையிடமாக கொண்டு
தமிழகத்தில்
பொற்கால ஆட்சியை தந்தவர்கள்.
அதுமட்டுமில்லாமல்
சோழர்களும்
இந்த மண்ணை ஆண்டுள்ளார்கள்
காரணம்
அருகில் உள்ள திருக்கோவிலூர்
திருக்கோவிலூரை
ஆட்சி செய்த மன்னன்

இராச இராச சோழனின் தாத்தா
அதாவது
இராச இராச சோழனின்
அம்மாவின்
அப்பா தான்
திருக்கோவிலூரை ஆட்சி செய்தவர்

ஆசுகவி என்று
போற்றப்படும்
காளமேகப்புலவர்
விழுப்புரம் மாவட்டம்
எண்ணாயிரத்தை சேர்ந்தவர்.

8 ஆம் வகுப்பு செய்யுளில் வரும்
பாரதத் தாய்
எனும் பாடலை பாடிய
கவிஞர்
அசலாம்பிகை அம்மையார்
கூட்டேரிபட்டிற்கு
உள்ளே உள்ள
ரெட்டணையை சேர்ந்தவர்

இதுமட்டுமில்லாமல்
நிறைய பேர் உள்ளனர்
நிறைய சிறப்புகளும்
உள்ளது
அதை எல்லாம்
என் ஆயுளுக்கும்
சொல்லலாம்
அவ்வளவு உள்ளது

முக்கியமாக
நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்
விழுப்புரத்தை சேர்ந்தவர்

இயக்குநர்
தங்கர் பச்சான்
பண்ருட்டி
பத்திரக்கோட்டையை
சேர்ந்தவர்

வடலூர் வள்ளலாரை
சொல்ல மறந்துவிட்டேனே
தமிழ் வளர்த்த
திருக்கோவிலூரிலும்
அதை சுற்றியுள்ள
ஊர்களில் எவ்வளவு ஜாம்பவான்கள்
பிறந்துள்ளார்கள்

அரசியல்வாதிகள்
நிறைய பேர்
இருக்கிறார்கள்
அவர்களை
எல்லாம்
குறிப்பிட்டால்
அரசியலாகிவிடும்
இருந்தும்
குறிப்பிடுகிறேன்
ஒருவரை

எங்கள்
ஊரை
சேர்ந்த
ஒருவர்
முதல்வராக
இருந்து
அதை குறிப்பிடாமல்
இருப்பது
முறையா?
ஓமந்தூரார்

(அரசியல் கட்சிகளுக்கு
அப்பாற்பட்டவள் நான்

எந்த அரசியல்
சாயத்தையும்
என் மீது பூசாதீர்

நான் ஒரு சாதாரண
தமிழச்சி..........

அவ்வளவே நான்
அதுவே நிறைவு எனக்கு)



எங்கள் ஊரை பற்றி
சொல்ல வேண்டுமென்றால்
ஓர் கருப்பு தினத்தையும்
சிகப்பு பக்கத்தையும்
சொல்ல வேண்டும்

ஏப்ரல் 7
2007
அன்று
எங்கள்
ஊரை
நாடே
திரும்பிப் பார்த்தது

வெடி பொருள்
தேசிய நெடுஞ்சாலை
பேருந்து நிலையத்தில்
வெடித்து
பதினாறு பேரை காவு வாங்கியதை
நினைத்தால்
இன்றும் மனம் பதைக்கிறது
அன்று என் அழகான
ஊர்
அலங்கோலமாய்
காட்சி அளித்தது

வாழ்க்கையின்
(காலத்தின்)
பிடியில்
நாம்
எல்லோரும்
கைப்பாவைகள்
என்பதை
அழுத்தமாய்
சொல்லிவிட்டு போனது காலம்.....

பூக்கள் கொட்டி கிடக்கும்
தேன் சிந்தி கிடக்கும்
வண்டு மொய்ந்து கிடக்கும்
ஆறு வளைந்து நெளிந்து
பெண்ணின் இடைபோல்
காட்சியளிக்கும்
ஏரி செழித்திருக்கும்
பூமி பச்சை புல்லை
போர்த்தி இருக்கும்
குளம்
பாவம் தீர்த்த அம்மனின்
அருளால்
தூய்மையை பரிசளிக்கும்
மொத்தத்தில்
என் ஊர்
என் ஊர் தான்

தென்றலை சுவாசித்து வாழும்
ஆற்றில்
குளித்து மகிழும்
பூக்களை வருடி மகிழும்
பசும்புல்லின் தாய்மடியில் படுத்து மகிழும்
மழையில் நனைந்து மகிழும்


~ செண்டூர் பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Aug-16, 10:08 am)
பார்வை : 144

மேலே