பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி - ‘ ஓஷோ ‘ ரஜனீஷ்

(ஓஷோ அவர்களது பல்வேறு நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டது)

ஸ்ரீ ரமணர் ஒரு பண்டிதரல்ல. ஏனெனில் அவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு நீங்கினார். மீண்டும் சாமான்ய வாழ்க்கைக்குத் திரும்பவில்லை.அவர் தனது மெய்யான இல்லத்தை (தான் என்னும் உணர்வை) அறிந்தார். உண்மையான வீட்டை அடைந்த பின்னர் யார் தான் சாமானிய வீட்டிற்குத் திரும்ப விரும்புவர் ? அவர் காட்டும் வழி நேரான ஒன்று. ‘நான் யார்’ என்னும் தேடுதல் மூலம் உனது உள்ளத்தின் மையத்தினைச் சார்வாய் ஆழ்ந்த ஞான உணர்வின் ஸ்தாபகர் ஸ்ரீ ரமணர் என்றே கூறலாம்.

ஒரு மிகச் சிறிய கையடக்கமான ‘ நான் யார் ‘ என்ற நூலின் வழியாக ஒரு மிகப் பெரிய உண்மையினை,மிக உயரிய மார்க்கத்தினை ரமணர் உணர்த்தினார்.பெரும்பாலும் மௌனத்தில் ஆழ்ந்திருந்த ரமணரின் மோன உபதேசமே மெய்யான வழி. கலீல் கிப்ரான் மஹரிஷி ரமணரைச் சந்தித்திருந்தால் மிக்க ஆன்மிகப் பயன் பெற்றிருப்பார்.அப்போது இந்த உலக குருவின் குரலை அவர் கேட்டிருப்பார். -----( நான் விரும்பும் நூல்கள் : 11ஆம் பகுதி )

எப்படி ரமண மஹரிஷிக்கு சிறுவயதிலேயே திடீரென ஆன்மிக எழுச்சி ஏற்பட்டது ? எங்ஙனம் அச்சிறுவனது தனித்துவம் மறைந்து, அவன் பிரபஞ்ச மெய்யுணர்வு பெற்றான் ? அச்சிறுவன் ஓர் இறப்புச் செய்தியைக் கேட்டான். ‘ நான் இறப்பு என்பது எது என்பதைக் கண்டுணர்வேன் ’ என்று முடிவுசெய்து கொண்ட அச்சிறுவன்,தன் உள்தேடுதலில் உடனடியாக ஆழ்ந்தான். இது ஒரு ஆன்மிக தேடல் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை. தனது அறையிலேயே படுத்துக்கொண்டு,மிகத் தீவிரமான உந்துதலுடன் தனது உள்ளே அவன் ஆழ்ந்தான். தனது உடலே இறந்துவிட்டது என்று அவன் பாவித்துக் கொண்டான்.அந்த இறப்புணர்விலேயே அவன் தீவிரமாக மூழ்கினான்.உடனே ஒரு ஞானக் கதவு படீரெனத் திறந்தது.காலத்தையும் இடத்தையும் கடந்த ஒரு பூரணம் அவனை அணைத்து கொண்டது. நமது அனைவரும் வாழ்விழும் அதிஷ்டானமாக அடித்தளமாக அமைந்துள்ள,அனைத்திற்கும் ஆதாரமான பூர்ண பிரக்ஞயில் அவன் கரைந்து விட்டான்.அந்த இறப்பு நாடகத்திலிருந்து அவன் கண் விழித்தபோது அவன் மிகவும் ஒரு மாறுபட்ட ஒரு வடிவமாக எழுந்தான்.

அவனுக்குள் என்ன நிகழ்ந்தது ? இதுவரை எந்தவிதமான சாதனையும் அவன் செய்ததில்லை. எந்த விதத்திலும் அவன் தனிப்பட்டுத் திகழ்ந்ததில்லை.அவனிடமிருந்து குறிப்பிட்ட ஒன்று என்னவெனில் அவனது மிக ஆழ்ந்த உறக்கம்தான்.அவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது மிகக் கடினமான காரியம். அவனை அடித்தாலும்,உதைத்தாலும் அவன் எழுந்திருக்க மாட்டான்.இதையே அச்சிறுவனது தனிச் சிறப்பாக கூறலாம்.ஏனெனில் ஆழ்ந்த உறக்கம் என்பது சமாதியின் வாயிற் கதவு.அதன் வழியாக நாம் ஆத்ம லோகத்தில் பிரவேசிக்கலாம் (எனக்கும் இப்படிப்பட்ட ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்). --(ஓர் உத்தம ஆசான்,பகுதி 1,அத்யாயம் 3)

ரமண மஹரிஷி கூறுகிறார் : ஆத்ம ஞானம் என்பது மிக எளிதாகப் பெறக்கூடிய ஒன்று.ஏனெனில் அதை எங்கேயும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது உன்னிடத்திலேயே உள்ளது. எப்போதும் இருந்து கொண்டே இருப்பது. நீ செய்ய வேண்டியதெல்லாம் வெளியே நோக்குவதே விட்டு உள்ளே திரும்பி நோக்க வேண்டிய ஒன்று தான். அந்த திரும்பி நோக்கிலேயே நீ ஆத்ம ஞானம் பெறுகிறாய். நீ உடனே ஒரு பிச்சைக்காரன் என்ற நிலையிலிருந்து சக்கரவர்த்தி என்ற நிலைக்கு உயர்கிறாய்.ஆத்ம சிம்மாசனத்தில் அமர்ந்து ஞான சாம்ராஜ்யத்தை ஆளத்துவங்குகிறாய். நீ செய்ய வேண்டியதெல்லாம் திரும்பி காண வேண்டியதுதான்.அதுவே ஆத்ம ஞானத்தின் திறவுகோல்.

சூஃபிகள் காட்டிய வழியும் இதுவே. இம்மானுவேல் காண்ட் போன்ற மேலவை தத்துவ அறிஞர்களும் ஆத்மிக அறிவு மிகச் சிரமப்பட்டு அடைய வேண்டிய ஒன்று என்று கூறியபோது ரமண மகரிஷி அது மிகவும் எளிதில் அடையக் கூடியது என்று அறிவுறுத்தினார் அவர் அதனைத் தனது அனுபவத்திலேயே அறிந்தார் அல்லவா ? - ( “ ஓர் உத்தமன் ஆசான் ; பகுதி 1 ; அத்தியாயம் 1 “ )
ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வின் இறுதி நொடிகள். புற்று நோய் அவரது உடலை அரித்து விட்டது.அத்தருணத்திலும்,ரமணர் தன் அருள் பார்வையுடன் புன்முறுவல் பூத்தார்.அவர் தேகம் தீவிரமான வாதனையை அனுபவித்திருக்கும்.ஆயினும் அவர் வதனம் புன்முறுவலுடன் விகசித்தது.

அழுதுகொண்டிருந்த பக்தர்களைப் பார்த்து அவர் கூறினார் : ஏன் அழுகிறீர்கள் ? போவதற்கு என்று ஒன்றும் இல்லை. நான் எங்கே உங்களை விட்டு போகப் போகிறேன் ? நான் இங்கே தான் தொடர்ந்து இருப்பேன். இந்தத் தேகம் மண்ணோடு மண்ணாகலாம் .ஆனால் எங்குமே செல்ல மாட்டேன். இப்போது இந்த அகிலத்தின் பேரலையாய் இருக்கிறேனோ அப்படியே தொடர்ந்து இருப்பேன். நான் உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன் என்பது உங்களது தவறான எண்ணத்தால் உண்டாவது. நான் எப்போதும் இப்போது போலவே இருப்பேன்.”

ஒரு ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உங்களால் காண முடிகிறதா ? இந்தத் தேகம் என்பது ஒரு அஞ்ஞானிக்கு அவனுக்கும் பூர்ண ப்ரக்ஞைக்கும் இடையே உள்ள தடைச்சுவராக உள்ளது.ஒரு ஞானிக்கோ அது அவனையும் பூர்ணத்துவத்தையும் இணைக்கும் பாலம். (வெள்ளை ரோஜா,அத்தியாயம் 1)

ரமண மஹரிஷி கூறிய நேர் வழி இதுவே. உண்மையான தியானம் என்பது ஒன்றே ஒன்றுதான். மௌனமாக அமர்ந்து ‘ நான் யார் ‘ என்று வினவுங்கால் முதலில் மனதின் மேல்மட்டத்தின் எழும் இவ்வினா,தொடர்ந்து விசாரித்து வர,அம்புபோல் உள்நோக்கி நம் மூலத்தை நோக்கிச் செல்கிறது.

அந்த வினா இதயத்தின் ஆழத்தில் ஓர் உணர்வாக மாறுகிறது. இந்த விசாரணையைத் தொடருங்கள். ஒரு நாள் இந்த உணர்வும் முற்றிலும் மறைகிறது. நீங்கள் வினாவையும்,விடையும் கடந்த மெய்யுணர்வாக பரிணாமம் அடைகின்றீர்கள். ‘ நான் யார் ‘ என்னும் இந்தக் கேள்வி,உங்கட்கு எழும் எல்லாக் கேள்விகளையுமே அழிக்க வல்லது.வினாவே அற்ற பரவெளியை நீங்கள் அடைகின்றீர்கள். அதுவே உங்களது தேடுதலின் விடையுமாகும்.அந்த விளக்கத்தை நீங்கள் அறிந்த பின்னர், உங்களால் யாருக்குமே அதைச் சொல்லால் விளக்க முடியாது, அது வினாவையும்,விடையையும் கடந்த நிலை. (வெள்ளை ரோஜா,அத்தியாயம் 4)

ரமண மஹரிஷியிடம் ஒருவர் “ நான் முழு மௌனம் என்ற நிலையில் என்னைப் பூரணமாக அறிய எதைப் பயில வேண்டும் ? “ என்று கேட்டார். அதற்கு ரமண மஹரிஷியிடம் விடையாவது : “ ஆத்மாவை அறிய நீ எதையும் புதிதாகக் கற்க வேண்டியதில்லை. உண்மையில் இதுவரை நீ கற்றதை எல்லாம் விட்டு விட வேண்டும்.உன்னையே நீ பயில்வாய் “ என்றாராம்.

இதுவரை நீ கற்றதெல்லாவற்றையும் மறந்து விடு.உனது புத்திசாலித்தனம்,சாதுர்யம் எல்லாவற்றையும் துறந்து,ஒரு குழந்தை போன்ற தன்மையுடனும்,நம்பிக்கையுடன் உள் நோக்கிச் சொல். உன்னைத் தவிர வேறு ஒன்றுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை. எனவே ஒரு திறந்த இதயத்துடன் ஞானத்தை வரவேற்பாய். இதுவே உண்மையான சிரத்தை உண்மையான அறிதல். (வெள்ளை ரோஜா,அத்தியாயம் 10)

ரமண மஹரிஷியின் உடலை புற்று நோய் விழுங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து விடுபட வழியே இல்லை. அவரைக் குணப்படுத்த பல மருத்துவ நிபுணர்கள் வந்தனர்.அவர்களுக்கு ஓர் அதிசியம் காத்திருந்தது.அவர்களுக்கு புரியாத நிகழ்ச்சியைக் கண்டனர். மஹரிஷியின் தேகத்தில் தாங்க முடியாத வலி அனுபவம் இருந்திருக்கும். ஆயினும் அவர் விழிகளில் அதற்கான அறிகுறியே இல்லை .அவை எப்போதும் போல பரம சாந்தக் கடலாகவே ஒளிர்ந்து கொண்டு இருந்தன.ஏனெனில் அவ்விழிகள் அவரது ஆத்மாவையே நோக்கிக்கொண்டு இருந்தன. “ காண்பது அந்தமில்லாக் கண் “ அல்லவா ?

அவரை மருத்துவர்கள் கேட்டனர் : “ பகவானே, உங்களுக்கு வலியே இல்லையா ? “ ரமண மஹரிஷி விடையிறுத்தார் : “ வலி இங்கே உள்ளது என்பது உண்மைதான்.ஆனால் அவ்வலி என்னால் அனுபவிக்கப் படுவதில்லை. என் உடலில் வலி உள்ளது என்பதை அறிவேன். ஆனால் அதை நான் ஒரு சாட்சியாகவே நோக்கிக்கொண்டு இருக்கிறேன். அதனால் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை.”

பலருக்கு எழும் கேள்வி இது.
" பகவான் போன்ற பரம ஞானிக்கு எப்படி இந்தக் கொடு நோய் வந்தது ? “

ஒரு ஞானிக்கு ஏற்படும் துன்பங்களும்,மகிழ்ச்சியும் அவரது உடலுக்கே ஏற்படுபவை.அவை அவர் ஆத்ம சாட்சாத்காரம் அடைவதற்கு முன் துலங்கிய கர்ம பலன்களின் தொடர்ச்சியே.ஒரு கனவில் விதைக்கப்பட்ட விதைகள் கனவிலேயே வளர்ந்து விதை கொடுக்கலாம். நான் விழித்து எழுந்த பின் இவை கனவுக் கனிகள் என்றே உணர்கிறேன். நான் கனவிலேயே தொடர்ந்து இருந்தால் அந்தக் கனிகளை அறுவடை செய்து,அதன் விதைகளை அடுத்த பயிர்வரை விதைத்து இருப்பேன்.விழித்தெழுந்துவிட்ட நானோ இந்தப் பயனற்ற செயலில் ஈடுபட மாட்டேன் அல்லவா ?

அந்தக் கனவுக் கனிகள் பழுத்து உதிர்ந்து விட்டன.அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை.அது போன்றே,ஞானிக்கு ஏற்படும் இன்ப,துன்பங்களும் பழைய கர்ம பலங்களின் தொடர்ச்சி என்றும்,அவற்றுடன் உண்மையான தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என உணர்ந்து உள்ளான்.

ஒருவர் வந்து ரமணர் பாதங்களில் புஷ்பங்களைச் சமர்ப்பிக்கும் போதும்,அவர் பற்றற்குக் காண்கிறார்.அந்த பக்தனின் நல்கருமங்களே அவனை தன் பாதங்களில் புஷ்பங்களை சமர்ப்பிக்க வைக்கின்றன.அவற்றை பகவான் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டால் அந்த பக்தனுக்கு ஒரு புதிய கர்ம வினைக்கான ஆரம்பம் நிகிழும். அதே சமயம் ‘ இப்படிச் செய்ய வேண்டாம் ‘ என்று அவர் மறுத்தால், அது பகவானிடம் ஒரு எதிர்மறையான தர்மத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த ஏற்பு மற்றும் மறுப்பு இரண்டுமே செயல் தொடக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை.

அவர் எப்பொழுதும் அசைவற்று சாட்சியாக வீற்றிருந்தார்.

(வெள்ளை ரோஜா,அத்தியாயம் 3)
நன்றி : ரமணோதயம் ஜனவரி 2015

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (11-Aug-16, 1:49 pm)
பார்வை : 500

மேலே