உன்னை நினைக்கையிலே ​​​

​​விழி தாண்டும் வழியின்றி வாலிபமும்
விதி மீறிடும் தடையின்றிப் பருவமும் !
வழி தேடிடும் வயதுக்கேற்ற உருவமும்
மொழி மறந்து அசைவுகள் மொழியாகும் !

நோக்கினேன் அவள் பார்வை தாக்கியதால்
மயங்கினேன் பாவையின் காதல் விழியால் !
உணர்வின்றிப் போனேன் உலகை மறந்தேன்
உணவின்றி உறங்கினேன் கனவிலும் காண !

கண்டிடவே நாளும் கடற்கரை சென்றேன்
துவண்டேன் துயரால் காணாது அவளை !
துள்ளினேன் கண்டதும் ஒருநாள் மாலை
அள்ளிட நினைத்து அடக்கினேன் மனதை !

கோதிய கூந்தலுடன் கோதையும் வந்தாள்
மோதிய அலைகளால் மோகமும் கூடியது !
போதிய நேரமின்றி பொறுமை இழந்தேன்
வேதிய மாற்றத்தால் வெப்பம் அடைந்தேன் !

பூத்தாள் புன்னகை உதிர்த்தாள் உரைநடை
காணாத காரணத்தை அவளே செப்பினாள் !
குலதெய்வ பூசைக்கு குடும்பமே பயணமாம்
மன்னிப்பு வேண்டி மண்ணில் கோலமிட்டாள் !

கதிரவனைக் கண்ட பனித்துளி மறைவதாய்
உதிரம் உறைந்திட உள்ளமும் கரைந்தேன் !
உண்மை விருப்பத்தை நேர்படக் கூறினேன்
கண்மை பளிச்சிட கண்ணாலே சம்மதித்தாள் !

காதலர்கள் ஆனதால் காதோரம் கிசுகிசுத்தேன்
கல்யாண நாளையும் தோதாக தெரிவித்தேன் !
சட்டென நகர்ந்தவள் பட்டென உரைத்திட்டாள்
இருவீட்டு சம்மதமுடனே மன்றலும் என்றாள் !

நடுசாம நேரத்திலே நம்பியவனுடன் ஓடுகின்ற
நாகரீக காலத்திலும் பெற்றவர்களை நினைத்து
நன்றியுடன் பேசுகின்ற நங்கையிவள் வாழ்கவே
நெஞ்சம் சிலிர்க்கிறது உன்னை நினைக்கையிலே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Aug-16, 9:23 pm)
பார்வை : 602

மேலே