விழிதாண்டும் துளிகள்

விழிதாண்டும் கண்ணீர்த் துளிகள்
=விரைந்தோடும் கன்ன நதியில்
மொழியற்று நீந்தும் மீனாய்
=முடியாத காதல் துயரம் .
நினைக்காத ஒன்றை நினைக்கும்
=நினைவாலே நித்தம் கனவில்
நனையாமல் நனைந்து நனைந்து
=நலங்கெட்ட காதல் நரகம்
கல்லாத கல்வி கற்று
=கரைசேர்ந்து விட்ட போதும்
சொல்லாத காதல் கல்வி
=சுயமாக கற்றும் தோல்வி
எழுதாத பரீட்சை ஒன்றை
=என்றென்றும் எழுதும் இதயம்
பழுதான முடிவு ஒன்றே
=பரிசாக என்றும் வாங்கும்
மௌனத்தின் கடலின் அடியில்
=மயக்கத்தால் விளைந்த முத்து
பௌர்ணமியின் முன்னே நிற்க
=பயந்தோடும் பருவ சொத்து
கல்யாணப் பந்தல் போட்டு
=கச்சேரி மேளம் கொட்டி
உல்லாச பயணம் போக
=உள்ளத்தில் பூத்த ஆசை
வெள்ளாமை விளைந்த பின்னும்
=வீட்டுக்குக் கொண்டு செல்லா
வெள்ளாமைக் காரன் கொண்ட
=வீராப்பால் வீணாய் ஆக
உள்ளுக்குள் வாட்டும் துயர
=உஷ்ணத்தில் குளிக்கும் மங்கை
முள்பட்ட சேலை யானால்
=முடிவதனைத் தான்நினைக் கையிலே
*மெய்யன் நடராஜ்