எழுதுகோல் அழுகிறது
உறைமூடிய எழுதுகோலை
உறங்கவிடாமல்
உன் எழுதுக்களோடு
உறவாட வைத்த நா. முத்துகுமரா.
தங்க மீன்கள்
தாளம் போட ஆனந்த யாழினை
மீட்டிய கவிஞான வித்தகனே.
சைவத்தில் - செவிகளுக்கு
அசைவை தந்த ஆனந்த ரூபனே.
சுதந்திரம் கொண்டாடும் வேளையில் - நீ உன்
சுவாசத்தை நிறுத்திக் கொண்டாயே.
காஞ்சி மண்ணில் விதையாய் ஊன்றி
கவிஞனாய் வளர்ந்து வருகின்ற வேளையில்
காலனிடம் கண்ணயர்ந்தாயே. - எழுதுகோலின்
கனவுகள் இந்த மண்ணில் அழுகின்றதே.
தேசிய விருதுகள்
உன்வீட்டு அலமாரியில்
உன்னைத் தேடுகின்றதே.- இந்த தேசமும்
உன்னைத் தேடுகின்றதே.- நீ விட்டு சென்ற
உறைமூடிய எழுதுகோல்
உறங்காமல்
உன் கரங்களைத் தேடுகின்றதே.
புத்தக அலமாரியில் - பல
புத்தகங்கள் உன்னைத் தேடுகிறதே.
நீ ஏற்றிவைத்த குடும்ப விளக்கு
எரியாமல் இருட்டில் தவிக்கிறதே.
நீ மறைந்தாலும் - உன் விரல்பட்ட
வார்த்தைகள் சாகா வரம் பெற
வாழவைத்து சென்றாயே. - நீ மட்டும்
சாவைத் தேடி சென்றாயே.- 40 வயது
சாதிக்கின்ற வயது, - இந்த வயதில்
சாதிக்குமுன் - இளம் வயதிலேயே
சாதித்து விட்டோம் என்று
சாவிடம் உன் உயிர்
சாவியைக் கொடுத்தாயோ.
உயிரை மட்டும் மரித்துகொண்டாய் - ஆனால் உன்
உணர்வுகள் மட்டும்எழுத்துக்களாய் இந்த மண்ணில்
உயிர்ப் பெற்று நிலைத்து வாழ்கின்றது. புத்தகங்களாய்.