உன்னுடைய நானும் என்னுடைய நீயும்

வார்த்தைகளின் புல்வெளியில்
காதல் நடைபோடுகிறது

வசந்தத்தின் காத்திருப்பு
ஒரு ஜீவநதியென
ஓடிக்கொண்டிருக்கிறது

இதழ் சுவைத்த பிறகு
பின்னங்கழுத்தை நோக்கி
பயணப்படுகிறது
முத்தங்களின் மிச்சம்

அவிழ்ந்து கிடந்த
இந்த இரவை
அள்ளியெடுத்து
முடிந்து கொள்கிறது
நிறமற்ற நிர்வாணம்

நட்சத்திரங்களை போல
சில நிஜங்கள்
வெட்கத்தில் மட்டுமே
பழுக்கின்றது

அணில்குஞ்சிகளைப்போல
ஓடி விளையாடுகிறது
காற்றின் கையெழுத்து

இந்த புள்ளியின்
ரகசிய ரசனையில் தான்
சந்தித்துக் கொண்டோம்
உன்னுடைய நானும்
என்னுடைய நீயும்

- கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (17-Aug-16, 1:14 pm)
பார்வை : 117

மேலே