சாதனையின் அடிப்படை சுதந்திர விழிப்புணர்வு --

ஹரியானா மாநிலத்தில் வாழும்
அந்தத் தாய்
ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தாள் தன் மகள்
சாதனைப் பதக்கம் வெல்லக் கேட்டதால்!
தந்தையையும் புகழ்ந்தனர்
"என்ன தவம் செய்து இவளைப் பெற்றாரோ?" என்று
அவள்தான் சாக்ஷி மலிக்!

ரியோ ஒலிம்பிக்ஸில் --
மல்யுத்த வீராங்கனைக்கான
முதல் பதக்கத்தை
பாரதத்துக்கு பெற்று தந்தவள் !
பாரதத் தாயும் பெரிதுவந்தாள்!
அவள் குடும்பம் இன்று
இசையும் நடனமும் வாண வேடிக்கையுமாய்
அவள் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது!
ஏன்! பாரத தேசமே கொண்டாடுகிறது!
இந்தியப் பெண்ணால்
எந்த சாதனையும் செய்ய முடியும்
என்பதற்கு சாக்ஷியே சாட்சியாகிறாள்!

ஆனால் இந்த வெற்றியோ --
அதற்கான பயிற்சிகளோ
இவள் தடையின்றி அடையவில்லை!
பன்னிரண்டாம் வயதில்
பயிற்சியை துவங்கும்போதே
"ஆண்களுக்கான விளையாட்டில்
இவள் பயிற்சி எடுப்பதா?" என
வலுவான எதிர்ப்புக்குரல்
ஊர்மக்கள் எழுப்பினர் !
சாக்ஷியின் பயிற்றுவிப்பாளருக்கும்
எதிர்ப்பலைகள் அனுப்பினர்!

மல்யுத்த விளையாட்டை
காதலிக்கும் மாநிலம் அது!
இருந்தும்--
பெண்ணுரிமைத் தடை
வழியில் நின்றது.

"சட்டமா தடுக்கிறது ?
சட்டத்தின் முன்
இருபாலரும் சமம்;
சமுதாயம்தானே
நியாயமின்றி எதிர்க்கிறது !"
என்ற சுதந்திர விழிப்பை
பெற்றோர் சாக்ஷிக்கு ஊட்டினர்!
உற்சாகப் படுத்தினர் !

கடும் பயிற்சி செய்தாள்!
2010 உலக சாம்பியன் !
2014 காமன்வெல்த் !
2015 ஆசியன்!
என்று பதக்கங்களை குவித்தாள் !
இன்று ரியோ ஒலிம்பிக்ஸ் பதக்கம் !

இருக்கும் உரிமைகளை
நியாயமான உரிமைகளை
விழிப்போடு உணர்வோம்!
உணர்வோடு செயல்படுத்தின்
துணிவோடு செயல்படுத்தின்
வெற்றி நிச்சயம்!
சாதனையின் அடிப்படை
சுதந்திர விழிப்புணர்வு!






.

எழுதியவர் : ம கைலாஸ் (18-Aug-16, 11:09 pm)
பார்வை : 609

மேலே