தூது
தூது.
மின்னாள் சிந்தையும் என் நினைவும்
பொன்னும் நவமணியும் போல் பொருந்தியதால்
கன்னலாய் இனிக்கும் அந்த காதலினால்
சொன்னதைச் சொல்லும் கோகிலமானேன்.
என்ன செய்வது என்று என் மனம்
தன்னாலே ஏங்கி நிற்கத் தோதாக
இன்னொருவர் துணை கொண்டு தூதனுப்ப
உன்னிடம் அது நடக்காதென்பதனால்
புகழேந்திப் புலவன்தன் ரத்தினச் சுருக்கமதில்
சகமிதிலே தூதுரைக்க எவற்றைக் கொளலாமென்று
வரையரை செய்ததனால் வாட்டமாகி நிற்கின்றேன்
தரையிதிலே கால்கள் தள்ளாடித் தவிக்கின்றேன்.
மேகமதைத் தூதுவிட்டால் “மேகதூதம்” ஆகிவிடும்
வாகாக அன்னமதை அன்றே நளன் விட்டு விட்டான்
தன்னழகுக் காதலியாம் தயமந்தி அவளுக்கு
உன்னிடத்தில் தூது சொல்ல என்ன செய்வேன் யான்.
மயிலும் குயிலும் கிளியும் நாகணவாயும்
கயிலையுறை வெண்மேகமும் நெஞ்சும் தென்றலும்,
வண்டும் பொன்னும் பணமும் தூதாகிடுமோ
செண்டு போல் பூத்திருக்குமுன் தோழியை அனுப்பவோ
கலிவெண்பாதனில் வடித்து தசாங்கமும் அமைத்து
மலிவிலா தூதுப் பொருள்: சிறப்பினை நான் பாடி
வலியிதனை எடுத்துரைக்க வரையறையெலாம் மீறி
பொலிவான கவிதையிதை அனுப்பினேன் தூதுனக்கு.