நிறங்கள் கலையாத வானவில்
காதல்
கனவுகளின் ஓடையில்
காகித ஓடம் !
கவிதை
நிறங்கள் கலையாத
ஒரு வானவில் !
கற்பனை
தொடத் தொட விரியும்
ஒரு தொடுவானம் !
மௌனம்
சொற்கள் இல்லாத
ஓர் அழகிய கவிதை
கனவு
துயில் எழுதும்
ஒரு வண்ண ஓவியம்
துயரம்
கண்ணீர் கன்னத்தில் எழுதும்
சுய சரிதை .
ராகம்
சுரங்கள் ஏழின்
சுய ஊர்வலம் .
மோகம்
ஆசைகள் அனைத்தின்
மனக் கலசம்
விளம்பரம்
பொய் பாதி நிஜம் பாதி
அர்த்த நாரி .
கவிஞன்
காளானையும் கவின் மலரையும்
சம நோக்குடன் பார்ப்பவன்
ரோஜா
பல சிறகுகள் கொண்ட
தோட்டத்து தேவதை .
புன்னகை
காதல் எழுதும்
மன ஓவியம் .
தென்றல்
காதலில் உலவும்
உருவற்ற மன்மதன்
மலர்கள்
சிரித்து வாழத் தெரிந்த
புண்ணிய சீவன்கள் .
வீணை
விரல் தொட்டால் சிறகு விரிக்கும்
ராக தேவதைகளின் கலைக்கூடம் .
மரம்
நிற்பவனுக்கு நிழல் வாழ்பவனுக்கு வீடு
செல்பவனுக்கு சிதை தரும் வள்ளல்.
காகிதம்
எழுதினால் புத்தகம் விற்றால் பணம்
விற்காவிட்டால் பலசரக்குக் கடைப் பொட்டலம் .
மனம்
நீள அகல ஆழமில்லை
தொடாமலே ஊறும் உணர்வுகளின் மணற்கேணி .
காமம்
காதலாகி கவிதையாகி
உணர்வுக்கப்பால் உடல் சேரும் சூத்திரம் .
வாழ்க்கை
அனுபவங்களின் ஊர்களைத் தேடித் திரியும்
திருப்த்தி இல்லாத பயணி .
----கவின் சாரலன்