கொங்கு மண்டலத்தின் நெஞ்சை நிமிர்த்தும் ரேக்ளா

நம்ம ஊரு ரேக்ளா ரேசு பற்றி:

கொங்கு மண்டலத்தின் நெஞ்சை நிமிர்த்தும் 'ரேக்ளா'

உடுமலை வட்டாரத்தில் "ரேக்ளா' பந்தயங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.தங்கத்தை அள்ளிக் கொடுக்கும் இப்பந்தயத்தில் பங்கேற்க, 300க்கும் மேற்பட்ட வில் வண்டி, மாடுகளுடன் விவசாயிகள் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.

கொங்கு மண்டலத்திற்கே உரித்தான இந்த ரேக்ளா பந்தயத்தில், மாடுகள் தேர்வு முதல் பந்தய வெற்றி வரை சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன.வேகமாக ஓடுவதில் காங்கயம் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல்லை.

தற்போது காங்கயம், மூலனூர், வெள்ளகோவில், சிவகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே. இந்த இன காளைகள் உள்ளன. காங்கயம் காளைகளுக்கு போட்டியாக, தற்போது பந்தயத்தில் "லம்பாடி' இன காளைகளும் களத்தில் இறக்கப்படுகின்றன.
ஆனால், காங்கயம் காளைகளுக்கு இணையாக இவை பரிசு பெறுவதில்லை.

பசுமை புரட்சி காரணமாக, தற்போது விவசாயப் பணிகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன. இதனால் கிராமங்களில் கால் நடைகளை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்வதை விவசாயிகள் மறந்து விட்டனர்.தற்போது பசு, எருமை இனங் கள் மட்டுமே பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. உழவுக்கும் இனப்பெருக்கத்திற்கும் மட்டுமே காளைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதையும், உழவுக்கு இயந்திரம், இனப்பெருக்கத்திற்கு "உறை விந்து' என அறிவியல் வளர்ச்சி மாற்றிவிட்டது.

இதனால் காளை இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

இந்நிலையில் ரேக்ளா பந்தயத்தால், மீண்டும் காங்கயம் இன காளைகளுக்கு தனி மரியாதை கிடைத்து வருகிறது.இதிலும் நெட்டை, குட்டை என இரு வகைகள் உள்ளன.

ரேக்ளாவிற்கு நெட்டை காளைகளே பயன்படுகின்றன. வறண்ட, மானாவரி நிலங்களில் வளரும் இந்த காளைகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும்.

பந்தயத்திற்கு தேவையான காங்கயம் காளைகளை கண்டுபிடிப்பதே தனி கலை.

இதற்காக சித்திரையில் கண்ணபுரம் மாட்டுதாவணிக்கும், ஆனியில் ஒட்டன் சத்திரம் அத்திக் கொம்பை சந்தைக்கும், ஆடியில் பழனி, தொப்பம்பட்டி, கோபி, அந்தியூர் சந்தைகளுக்கும் வர்த்தகர்கள் செல்கின்றனர்.ரேக்ளாவிற்கு தேர்வு செய்யப்படும் ஜோடி காளைகள் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.தங்கள் காளைகள் வெற்றி பெறுவதை கவுரவமாக நினைக்கும் விவசாயிகள் பலர் உள்ளனர்.

கேரள மாநிலத்தின் பாலக் காடு, கம்பரசல்லா, சித்தூர் பகுதிகளிலிருந்தும், உடுமலை, வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை, தாராபுரம், அங்கலக்குறிச்சி, குடிமங்கலம், காங்கயம், ஒட்டன்சத் திரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பந்தயத்தில் பங்கேற்கின்றன. பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரை சவரன் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

பொழுதுபோக்கு அம்சமாகவும், விவசாயிகளின் கவுரவத்தைக் காட்டவும் நடத்தப்படும் ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாயும் காளைகளைக் காண மக்கள் கூட்டமும் அலை மோதும். ரேக்ளா பந்தயம் தென் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது.

விளையாட்டில் பயன்படுத்தப்படும் கடிகாரத்தின் உதவியுடன், குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் மாடுகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது.

உடுமலை அருகே பள்ளபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில், டிஜிட்டல் முறையில் துல்லியமாக நேரம் கணக்கீடு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

காளை வயதை காட்டும் பல்:

இரண்டு ஆண்டுகள் ஆன காளைகள் 200 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொள்ளும். 4 ஆண்டுகளுக்கு மேல் ஆன காளைகளுக்கு ஆறு பல் முதல் எட்டு பல் வரை இருக்கும். இந்த காளைகள் 300 மீட்டர் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது 200 மீட்டரை 14 நொடியில் கடந்தும், 300 மீட்டர் தூரத்தை 25 நொடியில் கடந்தும் காளைகள் சாதனை புரிந்துள்ளன.

காளைகளை பருத்திக்கொட்டை, பேரீச்சம்பழம், முட்டை, தேங்காய், பச்சரிசி, பால் ஆகியவை கொடுத்து வளர்க்கின்றனர். பந்தயத்திற்கு முன்தினம் இரவு தீவனம் கொடுக்காமல், ஊட்டச்சத்து மட்டுமே கொடுக்கப்படுகிறது.

வில் வண்டி உருவாகும் விதம்: ரேக்ளாவிற்கு வில் வண்டி பயன் படுத்தப்படுகிறது. இந்த வண்டிகளைத் தயாரிக்க ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது. கரங்களுக்கு உயர்தர "பேரிங்' பயன்படுத்தப்படுகிறது.

வண்டி ஓட்டுகையில் சொகுசாக இருக்க, "கட் ஸ்பிரிங்'கை பயன்படுத்தும் வண்டிகள் உள்ளன. ரேக்ளாவிற்கு பயன்படும் வண்டிகள், உடுமலை அருகே ஜல்லிபட்டி, தாராபுரம் போன்ற இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.


நன்றி: முகநூலில் Leayaakatali Abdulsalam, Vignesh Velusamy Gounder

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (21-Aug-16, 9:24 pm)
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே