நீ இந்த தலைமுறைக்கு உகந்தவன் அல்ல
சுற்றும் முற்றும் ஆட்கள் இருக்க
மனித பிறவி என்பதை மறந்து
நாய்கள் போல நடு தெருவில்
முத்தங்கள் கொடுப்பது அனத்தம் என்றேன்
இலக்கியம் சொல்லா வார்த்தைகள் தொடுத்து
அர்த்தம் இல்லா வரிகள் அமைத்து
எழுதும் வரிகள் பாடலா என கேட்டு
பழம்பெரும் பாடல்களை உதாரணம் காட்டினேன்
அங்கங்கள் மறைப்பதே ஆடைகள் என்க
அந்தரங்க உறுப்புகள் தெரியும் வண்ணம்
உடுத்தும் உடைகளின் இருப்பு தான் எதற்கு
காரணம் அறியாமல் விழித்தபடி கேட்டேன்
பிள்ளைகள் வளர்ப்பதே பெரும் இன்பம் என்பர்
அத்தகைய பிள்ளைகள் பெற்று எடுப்பதே
அழகிற்கு ஆபத்து எனும் பெண்களை கண்டே
இவர்கள் வாழ்வில் இன்பம் எதுவென வியந்தேன்
நல்லொழுக்கம் படைத்தவன் கதாநாயகனாம்
தீயவனை ஒழிப்பதே அவன் பணியாம்
புகையும் சரக்கும் நாயகனுக்கெதற்கு
உண்மை புரியவில்லை எனக்கு
அறியா பருவத்தில் வரும் காதல் எல்லாம்
புத்தகத்தில் சேர்த்து வைக்கும் மயில் இறகு போல
நாளடைவில் எண்ணி அகம் மகிழ்ந்து கொள்ள
அதை அறியாமல் ஊர் சுற்றும் பள்ளி சீருடை காண்கையில்
மனம் பொறுக்காமல் கேட்டேன்
படிக்கும் வயதில் காதல் எதற்க்கென்று
இத்தனை கேட்டும் பதில் தரா சமூகம்
தவறாமல் சொன்னது எனக்கான அறிவுரையை
"நீ இந்த தலைமுறைக்கு உகந்தவன் அல்ல"