கடிதம்

கடிதம்

எழுத்தறிவு இல்லாத இளவட்டப் பூவின்
=எழில்கண்டு மயந்துருகி ஏடெடுத்து அன்பை
எழுத்தாக்கி அஞ்சலிட்டுப் பதிலுக்காய் நித்தம்
=எதிர்பார்த்துக் காத்திருந்த ஏகாந்தத் தவிப்பை
பழுதாக்கி விடவென்று பாரினிலே இன்று
=பரவலாக வளர்ந்துவிட்ட தொழிநுட்பம் கையால்
எழுதுகின்ற போதில்வரும் இன்பத்தே னூற்றை
=இடையூறு செய்தடைத்து விட்டபெரு நட்டம்

மணியடிக்க செவிவைத்து மறுமுனையில் நிற்போர்
=மறுமொழிகள் சொல்லுவதை மறுநிமிடம் கேட்க
பணிபுரியும் தொலைபேசி பலவடிவில் இருக்கப்
=பார்த்திருக்கும் இக்கால பசங்களுக்கு எல்லாம்
மணிமணியாய் கையெழுத்தில் மயக்கவரும் கடிதம்
=மறுபடியும் மறுபடியும் மௌனமுடன் படித்துக்
திணித்துவிடும் பேரன்பின் தித்திப்பில் மூழ்கித்
=திகைபூட்ட தடைபோட்ட தொழில்நுட்ப வளர்ச்சி!

காதலுக்கு பாலமென கைகொடுத்தக் கடிதம்
=காதலர்கள் உள்ளத்தை காட்டிடுங்கண் ணாடி.
மோதலுள்ள வார்த்தைகளும் முத்தங்களும் கொண்டு
=மூடிவரும் கடிதத்துள் முட்டையிடும் அன்பு
கோதிவிடும் இதயத்தின் குளுகுளுப்பைக் கொன்று
=குப்பைக்குள் போட்டுவிட்ட கொடூரத்தொழில் நுட்பப்
பாதகத்தி னாலின்று பக்கவாதம் வந்து
=படுக்கையிலே கிடக்கிறது கடிதமுமே நொந்து.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Aug-16, 2:03 am)
பார்வை : 88

மேலே