நட்பதிகாரம்

கடலென்னும் உலகிலே நட்பென்னும் படகிலே
கைகளையே கோர்த்துக்கொண்டு வாழ்ந்து செல்வோமே
உடலென்னும் சிறைவிட்டு உயிரோடிப் போகும்முன்னே
நட்பென்னும் கூட்டுக்குள்ளே அடை படுவோமே

பணங்காசு பார்க்காது மனம்மட்டும் பார்த்திடும்
இனம்விட்டு இனம்சேரும் நட்பு நல்லதே
சிரிக்கும்நேரம் சிரித்திடும் அழும்கண்ணைத் துடைத்திடும்
குணத்திலெல்லாம் சிறந்ததாய் நட்பு உள்ளதே

தேன்போல இனித்திடும் இசைபோல பிடித்திடும்
நட்பென்ற ஒன்றென்றும் துயரங்களை விரட்டிடும்
வான்போல உயர்ந்தது பால்வெளியைவிட அகன்றது
நட்பென்ற நல்வழியே நமக்கென்றும் உகந்தது

நட்பென்ற பானத்தை பருகிடுதல் நன்றே
நட்பென்ற கானத்தில் உருகிடுதல் நன்றே
நட்பென்ற வானத்தில் பறப்பதுவும் நன்றே
நட்பென்ற ஒன்றில்வாழ்வை அடக்கிடுதல் நன்றே

நட்பென்ற ஒளிக்கொண்டு பார்த்திடுவோம் வாழ்வை
நட்பென்ற உளிக்கொண்டு செதுக்கிடுவோம் வாழ்வை
நட்பென்ற விழிக்கொண்டு அறிந்துகொள்வோம் வாழ்வை
நட்பென்ற மொழிமட்டும் பேசிடுவோம் வாழ்வில்

கோபங்கள் கர்வங்கள் நட்பின்முன்னால் ஓடும்
பதட்டங்கள் எரிச்சல்கள் வேறுவழி தேடும்
கஷ்டங்கள் கவலைகளை நட்பு தாங்கிக்கொள்ளும்
இஷ்டமாய் வாழ்வைமாற்றி தினமும் ஜ‌திசொல்லும்

சாந்தமான வாழ்விற்கு நட்புவிதை இடுவோம்
சந்தோஷமாய் வாழ்ந்திடவே நட்பூற்றி வளர்ப்போம்
வேகமான வெயில்முன்பு நட்புநிழல் இருக்கு
நட்பிருக்க புயலும்வந்தால் கவலைகளும் எதற்கு?

நட்புத்தென்றல் தழுவட்டுமே ஒவ்வொருவர் வாழ்வும்
நட்புச்சாரல் பொழியட்டுமே எல்லோருக்கும் என்றும்
நட்புக்கில்லை அதிகாரம் அன்புமட்டும் உண்டு
நட்பென்ற கவசம்பூண்டால் சந்தோஷமே உண்டு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Aug-16, 7:25 am)
பார்வை : 426

மேலே