பைந்தமிழ்ச் சோலைக்கு வாழ்த்து
பாமலரும் சோலையிது பாவலரின் சோலை
***பலனேதும் கருதாமல் பயிற்றுவிக்கும் சோலை !
நாமகளும் நடனமிடும் நனிசிறந்த சோலை
***நற்றமிழால் பூரித்து நன்மைசெயும் சோலை !
தாமறிந்த தமிழமுதைத் தந்திடுமிச் சோலை
***தன்னலமே யில்லாத தலைமைகொண்ட சோலை !
மாமணியாய் முகநூலில் மலர்ந்ததிந்தச் சோலை
***மாவரத ராசனிவர் வளர்த்திட்ட சோலை !
பாட்டியற்றப் பழக்கியதும் பைந்தமிழின் சோலை
***பட்டமுடன் பாராட்டும் பகிர்ந்தளிக்கும் சோலை !
நாட்டமுடன் வருவோர்க்கு நலம்பயக்கும் சோலை
***நாற்கவியும் பொலிவுடனே நடமாடுஞ் சோலை !
கூட்டுறவால் தமிழ்ப்பாக்கள் கொள்ளைகொள்ளும் சோலை
***குறைகளைந்து கொடிநாட்டிக் கொள்கைவெல்லும் சோலை !
ஏட்டினிலும் இடம்பிடிக்கும் ஏற்றமிகு சோலை
***எண்ணற்ற கவிபூக்கும் ஈடில்லாச் சோலை !
ஆண்டொன்று நிறைவுசெய்த அழகுமிகு சோலை
***ஆன்றோரின் வாழ்த்துகளில் அகமகிழும் சோலை !
தூண்போலத் தாங்கிநின்று தொண்டாற்றும் சோலை
***சொர்க்கமென மரபினிலே சொக்கவைக்கும் சோலை !
வீண்பேச்சுக் கிடங்கொடுக்கா வித்தகரின் சோலை
***விருத்தமொடு வெண்பாக்கள் விளையாடும் சோலை !
வேண்டுவன கற்பிக்கும் மேன்மைமிக்க சோலை
***வியன்மணியாய் ஒளிதந்து வியக்கவைக்கும் சோலை !