அன்னை தெரசாவுக்கு கவிதாஞ்சலி
அன்னை தெரசாவுக்கு கவிதாஞ்சலி
அன்பை பகிர்ந்த அருளோவியமே !
அன்பில் நிலைத்த மாதர் குல மாணிக்கமே !
அன்பு சோலையை உருவாக்கிய ஆல மரமே !
அன்பர் இயேசுவின் உண்மை ஊழியரே !
ஆதரவில்லா ஏழைகளின் துயர் துடைத்தவரே !
ஆரவாரமில்லாமல் பணியாற்றிய தயாபரமே !
ஆனந்தமெல்லாம் சேவையிலே என உயர்ந்தவரே !
ஆண்டவனின் கட்டளையை வாழ்வாக்கியவரே !
இரக்கமொன்றே இனியது என உரைத்தவரே !
இரக்கப்படுவோரின் நல் வழிகாட்டியே !
இந்திய திருநாட்டின் தவப்புதல்வியே !
இயன்றதை ஏழைகளிடம் பகிர சொன்னவரே !
ஈதலில் இன்பம் கண்ட இனியவரே !
ஈந்து கிடைக்கும் மகிழ்வை உணர்த்தியவரே !
ஈயார் தம் மனதை புன்னகையால் உருக்கியவரே !
ஈடில்லா புகழ் பெற்றும் தன் நிலை மாறாதவரே !
உண்மை சேவையால் உலகில் தலை சிறந்தவரே !
உலக நாட்டங்களை குப்பையென உதறியவரே !
உதவி கரம் நீட்டியே பெரும் பேரு பெற்றவரே !
உன்னத வாழ்வால் வானளாவ புகழப்பட்டவரே !
ஊழியமே என் வாழ்வு என சூளுரைத்தவரே !
ஊதியமற்ற பிறரன்பை நிலை நாட்டியவரே !
ஊறு விளைவித்தோரையும் அன்புடன் நேசித்தவரே !
ஊன்று கோலின்றி பவனி வந்த அன்பு சுடரே !
எந்த நிலையிலும் நம்பிக்கையுடன் வாழ்ந்தவரே !
எப்பணியிலும் ஏசுவை முன்னிறுத்தியவரே !
எங்கள் அனைவரின் கண் கண்ட புனிதரே !
எல்லா கண்டத்திலும் சபையை நிர்மாணித்தவரே !
ஏசுவோர் மத்தியிலும் புன் முறுவல் பூத்தவரே !
ஏசு பிரானின் அடி சுவட்டில் அற்புதமானவரே !
ஏளனம் செய்தோரையும் மன்னித்தவரே !
ஏதுமற்ற ஏழைகளின் நம்பிக்கை மலரே !
ஐம் புலன்களும் ஒரு சேர பரிவு கொண்டவரே !
ஐயாயிரம் பேருக்கு உணவளித்த யேசுவின் அன்பு சீடரே !
ஐயத்தோடு வாழும் மக்களின் கலங்கரை விளக்கே !
ஐயன் ஏசுவின் நல் வழி தோன்றலே !
ஒப்புயர்வற்ற பணிகளால் பல பரிசுகள் பெற்றவரே !
ஒவ்வொரு நாளும் நற்கருணையை ஆராதித்தவரே !
ஒளியாம் யேசுவின் வழியில் நடந்தவரே !
ஒருங்கிணைந்த செயல்களால் உலகை வசப்படுத்தியவரே !
ஓய்வொன்றில்லா கடமையாற்றிய கடுந்தவமே !
ஓயாத பணியிலும் மலர்ந்த பூப் போன்றவரே !
ஓங்கு புகழ் பெற்றிடினும் தாழ்ச்சி கோலம் கொண்டவரே !
ஓராயிரம் மலர்களால் உம பாதம் பணிந்தோம் !