ஏனமேந்தும் வாழ்வு ​

​என்றுமென் நெஞ்சி​ல் ஏக்கம் பெருகி வழிகிறது ​​​
​ஏழ்மை நிலைதான் ​ஏனென்று கதறியே கழிகிறது !
​​​எந்நாளும் இந்நிலை எள்ளளவும் இல்லா நிலை
​ஏட்சியும் ஆகாதா ஏழையரின் வாழ்வில் மாற்றம்​ !​

என்றாவது ​ஒருநாள் ஏற்றம் பெறுவர் ஏழைகளும்
ஏக்க​மிலா வாழ்வுடன் ஏகாந்தம் நிலவும் சூழலும்
எல்லையிலா இன்பம் எங்கும் பரந்து நிலைக்குமென
​ஏகபோகம் விளையுது என்னுள் எழுகின்ற வேட்கை !

எதுகைமோனை​ கவிதை எழுதி ஏழைக்குப் பயனில்லை
ஏனமேந்தும் மனிதரை எதிரிகளாய் நான் கருதவில்லை
எண்ணக்கரு​ அதுவே எனக்கென்று எழுதிட வரவில்லை
ஏழைபாழை​ ஏற்றம்பெற என்றுமே ​நாம் முயலவில்லை !

எத்தனித்தால்​ நிச்சயம் எதற்கும் வழியொன்று பிறக்கும்
​ஏகோபித்த நிலையால் ஏழ்மையை விரட்டவும் முடியும்
எதிர்மறை​ கருத்தின்றி எடுக்கின்ற முடிவால் விடிந்திடும்
​ஏழைகளே இல்லா எதிர்பார்ப்பும் நிறைவேறும் நிச்சயம் !

​எட்டாக்கனி அல்ல எளியோர் வாழ்வும் வளம்பெற
ஏமாற்றி வாழும் எவரெவரோ ​பீடுநடை போடுகிறார்
என்றுமே இங்கு ஏமாளி ஒன்றுமிலா ஏழைகள்தான்
ஏற்றிடுக சூளுரை ஏழ்மையை அறவே அழிப்போம் !

​( ஏனம் = பாத்திரம் )
( ஏட்சி = உதயம் )


​பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Sep-16, 9:28 pm)
பார்வை : 125

மேலே