வேண்டும் நல்ல தீபாவளி ------ படித்த விழிப்பு உணர்வுக் கட்டுரை படிக்க பகிர்க

கந்தகத்தை எரித்துக்
கண்ணைப் பறிக்கும் ஒளியோடு
விண்ணையும் காதையும்
பிளக்கும் சத்தத்தை எழுப்பி
மனசாட்சியைக் கொளுத்திவிட்டு
பிறஉயிரினங்களுக்கும்
இடையூறு செய்து….

இன்பம் காண்பவர்கள்

காற்றின் தூயமையைக் கெடுத்து
நிகழ்காலத்தை நாசமாக்கி
எதிர்காலத்தை இல்லாமல் செய்யும்
நரகாசூரனின் வாரிசுகள்


பாவம், நரகாசூரன் கூட
எதிர்காலத்தை அழிக்க எண்ணவில்லை.

ஓசோன் படலத்தில் ஒட்டை
விழுந்த பின்னும் நாம்திருந்த வில்லை.
பகுத்தறிவையும் பட்டாசோடு
வைத்துக் கொளுத்துகிறோமா?

தீமையை வளர்க்கும்
தீ வெடிகள் தேவையா நமக்கு?
எந்த இறைவர் நம்மை
இயற்கைக்குப் பங்கம் செய்ய
இட்டார் கட்டளை?

திரைப்படமும் தொலைக்காட்சிப்
பெட்டியும் வண்ண இதழ்களும்
திருவிழாக்களைத்தானே தினமும்
நமக்கு அள்ளித் தருகின்றன.
பொழுதைப் போக்க இன்னுமேன்
காற்றின் தூய்மையைக் கெடுக்கும்
வெறிச்செயல்கள்?

பகுத்துண்டு கொண்டாடுங்கள் தீபாவளி
புராணகால நரகாசூரன்
பொசுக்கப் பட்டுவிட்டான்.
கணிப்பொறி கால நரகாசூரர்களே…
இல்லாதவனை அழிக்கவா
காதைப் பிளக்கும் ஓசையை எழுப்பும்
பட்டாசுகளை வெடித்து
காற்றின் தூய்மை கெடக்
காசைக் கரியாக்குகின்றீர்?

காட்டு மிராண்டிகள்கூட
அர்த்தமுள்ள ஓசையைத்
தான் இரசிப்பார்கள்!

பலகோடி ஆண்டுகள் இருந்த
இவ்வுலகம் இன்னும்சில
ஆண்டுகளாவது இருந்துவிட்டுப்
போகட்டும்…
எதிர்காலத்தை இல்லாமல் ஆக்கும்
உரிமையை நமக்கு
யார் கொடுத்தார்கள்?

உயிரினத்தை வேரோடு அழிக்கக்
கங்கணம் கட்டிக் கொண்டா
சட்டம் அனுமதிக்கும் இந்தச்
செயலைச் செய்கின்றீர்?

அநியாய்ச் செயல்களை நாம்
கையகப் படுத்திக் கொண்டதால்
மும்மூர்த்தி களிலொருவர்
கைலாசத்திலேயே முடங்கி
சினங்கொண்டு நம்மைச்
சபித்துக் கொண்டிருக்கிறார்.

ஓசோன் படலத்தின் கதி
உங்களுக்குத் தெரியாதா?
ஒருநாள் ஆரவாரத்தில்
இல்லந் தோறும்
எழுப்பப்படும் இந்த நச்சுப்புகை
ஓராண்டு முழுவதும் இந்தியாவெங்கும்
விண்ணில் வேரூன்றும்
தொழிற்சாலைகளின் புகையினையும்
மிஞ்சுமே!
தொழிற்சாலைப் புகைநின்றால்
உற்பத்தி வீணாகும்.
தொல்லை தரும் கந்தகப் புகையால்
இல்லை யொரு இலாபம்.
இன்னல்தரும் கேடுதான் மிஞ்சும்.
சிவகாசிச் சிறார்-தொழிலாளர்களின்
வயிறு நிறையவே, நாங்கள்
பட்டாசு வெடிக்கிறோம்” என்று
பச்சைப் பொய்யைச் சொல்லாதீர்கள்.

இயற்கையில் எதுவுமே தனித்து நிற்கவில்லை
ஒன்றில் பலவும் பலவற்றில் ஒன்றும் உண்டு.
ஆதி சங்கரரின் அத்வைதக் கூற்று இது!
மாற்றுத் தொழில்கள் தாமாக மலர்ந்துவிடும்
சிவகாசிச் சிறார்களின் துயரத்தைப் போக்க.

கடந்த காலத்தில் வாழ்வதாய் எண்ணி
எதிர்காலத்தை நிகழ்காலத்தில் அழிக்கும்
கணிப்பொறிக் கால நரகாசூரர்களே,
எண்ணிப் பாருங்கள் …
சுயநலத்தைச் சுட்டுப் பொசுக்குங்கள்.

புத்தாடை அணிந்து இனிப்பையும்
பலகார வகைகளையும்
பகுத்துண்டு மகிழ்ச்சியுடன்
தீபாவளி கொண்டாடுங்கள்.
பட்டாசு வெடி இத்தோடு விடுங்கள்.

இந்த உலகம் இன்னும்
சிலநூறு ஆண்டுகளாவது
இருந்து விட்டுப் போகட்டும்.

-கவிதை: இரா. சுவாமிநாதன்

எழுதியவர் : (6-Sep-16, 7:12 am)
பார்வை : 133

மேலே