இனியவனுக்கீடுண்டோ

உப்புமூட்டைச் சுமந்தபடி உவகையுடன் சுற்றிவரும்
அப்பனுக்குத் தெரியுமவள் சுமையல்ல சுகமென்று !
சொப்புவைத்துச் சமைப்பவளின் சோறுண்டு பசியாறி
அப்பப்பா என்னசுவை என்றுமனம் பூத்திருப்பான் !
கொட்டுகின்ற மழையினிலே குடையிருந்தும் நனைபவளை
பட்டால்தான் தெரியுமென்றப் பத்தினியின் குரல்கேட்டும்
திட்டிடவே உள்ளமின்றித் தெரியாமல் ரசித்திருந்து
சொட்டிநிற்கும் மகள்தலையைத் துடைத்துவிட்டுப் புன்னகைப்பான் !
ராட்டினத்தில் ஏற்றிவிட்டுக் கத்துமவள் சத்தத்தால்
ஈட்டியினால் குத்தினாற்போல் இதயத்தில் வலியெடுக்க
ஓட்டுபவர் பக்கம்போய் ஓட்டத்தை நிறுத்தியவன்
காட்டுகின்றப் பாசத்தில் கடவுளுக்கும் புல்லரிக்கும் !
உறங்காத நினைவுகளை உள்மனத்தில் பதுக்கிவைத்து
மறவாமல் அசைபோட்டு மகளவளைப் பார்த்திருந்து
சிறகிழந்தப் பறவையாக சிலநேரம் துடிதுடித்தே
இறப்புவரை நாள்தள்ளும் இனியவனுக் கீடுண்டோ ....???