மௌனம் பேசட்டும்
தரையில் தொட்டணைக்கும் தங்க மலரே
நெஞ்சை தொட்டுவிட்ட எந்தன் எழிலரசி
குளிர்நிலவின் ஒளியிலே உனைக் கண்டேன்
தளிர் மேனியுன் அழகில் வீழ்ந்திட்டேன் !
இரவுப் பொழுதில் இசையால்
இதயத்தை வருடுகிறாய்
இழந்திட்டேன் என்னையும்
நனைந்திட்டேன் உன் கானமழையில் ...
அணைக்கத் துடிக்கிறேன்
ஆரத்தழுவிட விழைகிறேன் ...
நித்திரையைக் கலைத்த நித்திலமே
சித்திரை மாதத்தின் முழுநிலவே
முத்திரை பதிக்கிறேன் முகத்தினில் ...
நித்தமும் அளித்திடு தரிசனம்
கரிசனம் காட்டிடு கனவிலும்
நிலுவையில் வைக்காதே உன்வரவை ..
கருக்கானவன் நான் அறிந்திடுவாய்
சுருக்கமாய் உரைத்திடு சம்மதமும்
சுயசரிதம் கூறாதே பொறுமையில்லை ...
தூரிகையின்றி வரைந்த ஓவியமே
துகிலிகையின்றி எழுதிய காவியமே
துரிதமாய் கூறிடுக காரிகையே !
அமைதியே உந்தன் மொழியெனில்
அடிபணிந்துக் நான் கேட்கின்றேன்
பேசட்டும் உன் மௌனம் ....
( கருக்கானவன் = ஒழுங்கானவன் )
( துகிலிகை = எழுதுகோல் )
பழனி குமார்

