ஆனந்தம் படைக்கும் பிரம்மா

வறுத்தெடுக்கும் வெய்யிலிலே வாடி வதங்கி
=வாசல்வரும் வேளையிலே வாஞ்சை யுள்ள
குறுஞ்சிரிப்பால் ஈர்த்தெடுக்கும் குழந்தைச் செல்வம்
=குரும்பையது குடித்ததுவாய்க் குளிர்ச்சி யூட்டி
நிறுத்திவைக்கும் ஆனந்தம் நிலைத்து நின்று
=நிழல்பரப்பும் மரமெனவே நிஜமாய் நெஞ்சில்
மறுகுகின்ற துயரமெல்லாம் மாற்றி வைக்கும்
=மருந்தாகும் வீட்டினிலே மலர்கள் பூக்கும்

உறவுகளின் மனங்களிலே உடைக்கப் பட்ட
=உணர்வுகளால் சிதைந்துவிட்ட உண்மை அன்பை
மறப்பதற்கு முடியாமல் மாக்கள் போன்று
=மலர்முகத்தைக் கவலைகளால் மெல்லப் பூட்டித்
திறப்பதற்கு சாவியின்றி திரிவோர் வீட்டில்
=திருவிளக்கு ஏற்றிவைத்தும் சூழும் இருளை
பிறந்துவிடும் குழந்தைமுகம் ஒளியை யூட்டி
=பிரித்துவிட மகிழ்ச்சியங்கு பிறப்பெ டுக்கும்.

கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து மோதல்
=காரணமாய் எழுகின்ற கர்வத் தாலே
ரணம்கொடுக்கும் துன்பத்தின் ராத்திரி தன்னில்
=ரகசியமாய் அழுகின்ற ராகம் எல்லாம்
மணம்கொடுக்கும் மலரெனவே மகிழ்வாய் வந்து
=மாற்றிவைக்கும் கைங்கரியம் மழலைக் குண்டு
பணம்கொடுத்தும் கிடைக்காத பேரா னந்தம்
=படைத்துவிடும் குழந்தைகளே வீட்டில் பிரம்மா
*மெய்யன் நடராஜ் .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Sep-16, 2:42 am)
பார்வை : 40

மேலே