நம் நாடு

பார் போற்றும் பாரதத்தில்
பலவித கலைகள் உண்டு.
மாமல்லபுரம் போல - மனம்
மயக்கும் சிலைகள் உண்டு.

வற்றாத நதி அளிக்கும்
வானுயர்ந்த மலைகள் உண்டு.
நலமாக பயிர் செழிக்கும்
வளமான நிலங்கள் உண்டு.

ஆன்மிகம் வளர்க்க இங்கே
ஆலயங்கள் பல உண்டு.
மானுடம் சிறக்க இங்கே
மாண்புமிகு கல்வி உண்டு.

உழைப்பு கண்டு அஞ்சிடாத
உறுதியான நெஞ்சம் உண்டு.
களைப்பு கொண்டு தூஞ்சிடாத
உரமான தோள்கள் உண்டு.

இமயம் முதல் குமரி வரை
இணைந்து வாழ வழியுண்டு.
எதிரிகள் பிரிக்க வந்தால்
எதிர்த்து தக்க வலிமையுண்டு.

சாதி மத பேதமில்லா
சமதர்மம் இங்கு உண்டு.
சாதிக்க நீ நினைத்தால்
சந்தர்ப்பம் பல உண்டு.

உறவுகள் கூடி வாழும்
உன்னத குடும்பம் உண்டு.
விருப்பமுடன் மனம் உவந்து
விருந்தோம்பும் குணம் உண்டு.

மனிதநேய பயிர் வளர்க்கும்
மாமனிதர் பலர் உண்டு.
உதவிக் கரம் நீட்டி
உதவும் கரங்கள் உண்டு.

தாய் நாட்டின் பெருமைகளை
வாய் மொழிந்தேன் உளமார.
ஒற்றுமையாய் நாம் வாழ்ந்து
உயர்த்திடுவோம் நம் நாட்டை.

எழுதியவர் : CHOKKALINGAM (16-Sep-16, 12:56 pm)
சேர்த்தது : ப சொக்கலிங்கம்
Tanglish : nam naadu
பார்வை : 67

மேலே