நதியின் கண்ணீர்

நானாக ஓடிவந்த நாட்டில் என்னை
=நதியென்று பெயரிட்டு நாளும் போற்றி
மீனாக நீந்திவிளை யாடிக் கொண்டும்
=மெதுவாகப் படகோட்டி மிதந்து சென்றும்
தானாகக் கரைசேரும் தண்ணீர் கொண்டு
=தரமான விவசாயம் செய்து வாழ்ந்தும்
தேனான கவிபாடி திளைத்த நீங்கள்
=திருடுகிற மணலாலே தேகம் சிதைந்தேன்.

அடர்மரங்கள் வளர்ந்திருந்த அடவி நின்று
=அருவியென சலசலத்து அசைந்து வந்து
தொடர்கதைபோல் முடியாமல் தொடரும் நதிக்குத்
=துணைநதியாய் இணைந்திருந்து தோள்கொ டுத்து
இடர்களின்றி வளம்கொடுக்க இயற்கை செல்வம்
=எனவிருந்து உதவிசெய்த எங்கள் ஓட்டம்
கடனெடுத்த உங்களைப்போல் கலங்கி நிற்க
=காடழிக்கும் கொடுமையினால் கண்ணீர் கொண்டோம்

ஓடிவர நாம்வகுத்த ஊற்றுப் பள்ளம்
=ஒவ்வொன்றாய் மண்நிறைத்து உங்கள் தேவை
கூடிவரும் காரணத்தால் குடிசை போட்டு
=குடும்பமுமே நடத்துகின்ற கரைமேல் மழைநாள்
ஆடிவரும் எங்களது அழகைக் கொன்று
=அபிநயந்தான் காட்டுகின்றீர். ஆற்று வெள்ளம்
தேடிவந்து குடிசைக்குள்ளே தேங்கி நின்று
=திக்கற்று போகவழி செய்த தென்று.

பொதுநலமாய் பெருக்கெடுத்துப் பாயும் எங்கள்
=புனிதமதை கெடுப்பதற்கு போட்ட அணையால்
புதுநலமாம் சுயநலத்தின் புதையல் தன்னை
=பதுக்கிவைத்தப் பாவத்த்தின் பலனாய் மண்ணில்
மெதுவாகத் தலைத்தூக்கும் மோதல் அதற்கு
=மறைமுகக்கா ரணியாய்நா மானோ மென்று
வெதுவெதுத்து ஆவியாகி வானம் என்னும்
=விழிவழியே அழுகின்றோம் விதியை நொந்து
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Sep-16, 1:38 am)
Tanglish : nadiyin kanneer
பார்வை : 211

மேலே