திருவரங்க தேவதை - 3

🌺திருவரங்க தேவதை- 3 🌺
கார்த்திக்கின் மனம் நாடிய பெண்ணை பற்றி வினா தொடுத்து மதனிடம் விருப்பத்தை கூறுகிறான் ...
இனி.,
கார்த்திக்கின் அத்தனை பேச்சுகளும் அவளை பற்றி தான் மதனிடம் கூறியது.எனவே, மதனும் ஒருவாறு தன் நண்பன் அப்பெண்ணிடம் மனதை பறிகொடுத்ததை தெரிந்துகொண்டாலும் கார்த்திக்கிடம் வெளிக்காட்டி
கொள்ளவில்லை.
கார்த்திக், மதன் இவர்களின் நட்பு வட்டாரங்கள் பெரிது, எனவே கார்த்திக்கின் காதல் வாழ்க்கையில் ஒவ்வொரு நண்பர்களும் முக்கியமானவர்கள் என்பதில் ஐயமில்லை.இனிவரும் காட்சிகளில் அவர்களும் கார்த்திக்கின் நட்புகரம் பிடித்து உதவி செய்வார்கள்.
இன்று, கார்த்திக்கின் காதல் துடிப்புகள் நேரம் நெருங்க நெருங்க இதயத்துக்குள் ஓசையிட்டன.அவளை இன்று எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்பதில் மிகவும் ஆசையென்றோ? ஆர்வமென்றோ? பிரித்து சொல்லமுடியவில்லை, ஆனாலும் ஏதோ தேடலின் சுகம் நெஞ்சுக்குழியினுள் நிரம்பி வழிகிறதென்றெ எடுத்துக்கொள்வோம் ஏனெனில் அந்த உணர்வு அந்த தருணத்தில் கார்த்திக்கின் மனம் மட்டுமே அறியும் .இப்படி கார்த்திக் தவித்திருக்க, மதனோ அந்த புளியமர பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள அழகு நிலையத்தில் தலைவாரிக்கொண்டிருந்தான் .காலையிலும் மாலையிலும் அந்த அழகுநிலையத்தில் கல்லூரிக்கு செல்லும் காளையர்களும் வேலைக்கு செல்லும் வாலிபர்களும் சந்திக்கும் இடமென்றெ கூறலாம். கார்த்திக், மதன்,
வடிவேல் மற்றும் இன்னும் சிலரும் கூடியிருந்தார்கள். ஒரே ஒரு நாளில் எவ்வளவு மாற்றம், எத்தனை உணர்ச்சிகள் இவை மொத்தமும் ஒன்று சேர்ந்ததினால் என்னமோ கார்த்திக் அவனாக இருக்கமுடியவில்லை .
காலை மணி 9.30,மிதிவண்டி மணியொசை இரண்டு முறை ஒலித்தது . கார்த்திக்கின் இதயத்திற்கு அழைப்பு மணியென்றே கூறலாம், வேகமாக கார்த்திக் திரும்பி பார்க்க மறுமுறையும் தப்பாமல் ஏவுகணையை அவள் விழி கொண்டு தாக்கியது, ஐந்தடி தூரம் மிதிவண்டி கடக்கும் வரை அவள் விழியுடன் உரையாடி தன்னுள் தானே பேச, அவளோ விழிகளின் சந்திப்பின் முடிவில் திரும்பி பார்த்துவிட்டு, "தொடர்ந்து வா " என்பதுபோல் சென்றுவிட்டாள். ஒரு பெரிய இன்பம் தற்காலிகமாக வருடிய சுகத்துடன் நிம்மதி பெருமூச்சு விடுகிறான்.
அப்போது வாசன் இருசக்கர மோட்டர் வாகனத்துடன் எதிரில் வர, அப்படியே அவனிடம் வண்டியை இரவல் வாங்கி பின் தொடர்கிறான்.
கார்த்திக்கின் ஒவ்வொரு அசைவும் மறுமுறை, மறுமுறையென்னும் விழிக்கெஞ்சும் ஏக்கம் சுமந்த காட்சிகளை அந்த இரவல் மோட்டார் வண்டி வந்து சொல்லும்வரை காத்திருப்போம்....
தொடரும்...
*மருதுபாண்டியன். க