சந்தோசம்

யாரோ ஒருவனுக்கு
குழிவெட்டி வைத்த சமயத்தில்
உன்னுடன் இருந்த சந்தோசம்
எவனோ வெட்டிய குழியில்
நீ விழும்போது சந்தோசமாகவே
இருக்கும் அவனோடு .
வருத்தத்தோடு பாயில் கிடக்கும்
உன்னுடைய துக்கத்தில்
வைத்தியனின் கைபிடித்த
வருமானமாய் இருக்கும்
பிணம் விழும் நாட்களில்
சவப்பெட்டிக் கடைக்காரனிடம்
குடிகொள்ளும் சந்தோசம்
பணப்பெட்டிக்குள் பணமாய்
பத்திரமாகவே இருக்கும்
சம்பள நாட்களில்
ஊரெல்லாம் பூப்பூத்து
மாதக் கடைசியில்
பதவி இழந்த மந்திரியாய்
சோபை இழந்து நிக்கும் சந்தோசம்
மழைநேரக் காளானைப் போலவும்
புல் நுனியில் பனித்துளியைப் போலவும்
இமைக்கும் நேரத்துக்குள் மலர்ந்துவிடும்
பூக்களைபோலவும் திடீரேன்றுத்
தோன்றி விடுகிறது.
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளை
வாங்கிக்கொண்டு வானவில்லை
தொட்டுவிடச் சிறகடிக்கும்
குழந்தை மனதில் குடியிருக்கும் சந்தோசம்
வளர வளர தேர்தல் காலத்து வாக்குறுதிகளாய்
நிறம் மாறவும் செய்கிறது
காதலின் வீதியில்
காலெடுத்து நடக்கையில்
சொர்க்கத்தின் பக்கமாய்
பயணித்த சந்தோசம்
கல்யாணத் தேசத்துக்குள் நுழைந்ததும்
காணாமலும் போய்விடுகிறது
சமாதானத்தின் கூடாரத்தில்
நிம்மதி முட்டையிட்டு அடைகாக்கும்
சந்தோசக் கோழி
சண்டையின் சமையற்கூடத்தில்
பிரியாணிக்காய் பலியிடப்படுகிறது.
என்றோ இருந்ததை தொலைத்ததான
புலம்பல்களில் வெளியேற்றப்பட்ட
சந்தோசம் எங்கும் போய்விடவில்லை
என்று உணரப்படாத அவஸ்தைகளில்
மரணித்தே போயிருக்கக் கூடும் எனும்
நம்பிக்கையில் கிடக்கும் நம்மில்
அது சந்தோசமாய் பார்த்துக்கொண்டே
பக்கத்தில்தான் எப்போதும் இருக்கிறது.
இதயத்தைத் தூரத்தில் வைத்துவிட்டு
கண்களை மூடிக்கொண்ட எங்களால்தான்
அதை பார்க்க முடிவதில்லை
*மெய்யன் நடராஜ்