மீண்டும் வாழ்க்கை
மீண்டும் வாழ்க்கை.!
இதயத்தின் ஓரம்
அழுத்திய பாரம்
இனிமையை தந்தது
தனிமையின் நினைவில்.!
பாதச்சுவடைக் காண
மீதி கனவுடன் நானும்
ஏதோ நினைவுடன்
புன்னகையுடன் நின்றேன்.!
வந்ததும் வந்தாய்
வசந்தத்தின் காற்றாய்
தந்தாய் அதிர்ச்சியை
புயலின் காற்றாய்.!
வண்ண உடையில்
பார்த்த பழகிய அழகு
வெள்ளை உடையில்
பார்த்ததும் அதிர்வு.!
ஈரமில்லா புன்னகை
பாரமானது நெஞ்சு
தூரத்தில் நின்று பேசி
போலியாய் விசாரிப்பு.!
பேச்சுக்காய் பேச
மூச்சது அடைபட
நெஞ்சத்தில் ஊசியாய்
மெல்ல இறங்கிய பேச்சு.!
அந்த நாள் பார்த்தேன்
தேவதையாய் அவளை
இந்த நாளில் ஏனோ
கைம்பெண்ணாக.!
ஏதேதோ பேசினால்
யாவும் பதியவில்லை
உணர்விழந்த
பாழும் நெஞ்சில்.!
உற்றார் உறவினர்
பார்த்து செய்த
திருமண பந்தம்
பாதியில் ஏனோ முடிந்ததாம்.!
பாதியில் முடிந்த
பந்தத்தை தொடர
உற்றார் உறவினர்
உதறினர் கையை.!
உதறிய கையை
பற்றிட நினைத்து
ஒற்றை மலரை
கரங்களில் புதைத்தேன்.!
பொங்கி எழுந்த
அழுகையில் நனைத்த
கண்ணீர் சுட்டாலும்
நெஞ்சத்தில் அது குளிராய்.!
பறவைகள் இரண்டும்
சிறகை விரித்ததே
புதிய வாழ்வினை காண
மகிழ்வினில் பறந்ததே.!
விஜயகுமார் வேல்முருகன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
