நாடு உயர பாமரன் மட்டுமே பாடுபட வேண்டும், பதவியில் இருப்பவனோ பரமாத்மாவோ அல்ல

காலை முதல் மாலை வரை
காணும் காட்சியிங்கே
கடுகளவும் நம்பிக்கை கொடுக்குமானால்
காத்திருப்பதில் பயனுண்டு!

அதிகாரத்தை ஆள்பவர்கள்
ஆரோக்கியமாய் பிரயோகித்திருந்தால்
ஏழைகளில் சிலர் ஏற்றம் பெற்றிருப்பர்,
ஏழைகளை இங்கே ஏழைகளாகவே
இலவசமென்ற பெயரில் வைத்திருந்தால்தானே
எதிர்காலம் இனிக்கும் எல்லா கட்சிக்கும்.!

ஜனநாயகம் இங்கே பணநாயகமானது
சோசலிசம் என்பதெல்லாம் சோத்துக்கற்றாளையானது
அதிகார துஷ்பிரயோகம் என்பதைத்தானே
அங்குமிங்கே காண்கிறோம், கோர்ட்டும் கூட.

தனி ஒருவனால் தீதுகளை களைவதென்பது
தீவிரவாதமாகும், கண்டோம் குஜராத்தில்.
தனி மனிதனைத்துதிபாடி தனம் கொண்டோர்
குனிந்து குனிந்து கூனாகி போனார் இங்கே!

ஆனது ஆகட்டும் போனது போகட்டும் ஆவது என்னவென்று
பார்க்கலாம், வறியவர் எண்ணிக்கை வளர்கிறதே,

பன்னாட்டு வணிகமும் வெளிநாட்டு முதலீடும்
இங்கே வந்தானதென்ன, கொழுத்தவன்தான் கொழுத்தான்
புதிய நிறுவனங்கள் வளர்ந்ததா என்றால் இல்லையே,
வங்கிகள் நிலையைப்பார்த்தாலே ஏமாற்றம் தான் மிச்சம் இன்று.

சிறு குறு தொழில் வளரட்டும் என்று வாய்கிழிய பேசியவன்
எல்லாம் வகைவகையாய் சம்பாதித்தானே தவிர
வாழ்வாதாரம் இங்கே வளர்ந்தபாடில்லை!

கோவை திருப்பூர் நலிந்ததற்கு சின்ன மீன்களை விழுங்கிய
பெரிய திமிங்கலங்களே, பேருக்கு உழைத்தார்கள்
வங்கிகள் வழங்கிய கடனெல்லாம் வானுயர்ந்தன
கேளிக்கை கூத்து என்று அவர்களும் ஏழைகளாய் இன்று.

ஜவுளி ஆட்டோமொபைல் பவுன்டரி ஏற்றுமதி இளைத்தது
விவசாயம் மற்றும் இன்னும் பிற கூட இளைத்துத்தான் போனது.
உலகச்சந்தையில் உள்ளபடி நல்ல தரத்தை கொடுத்தால் போதும்
பெருகும் வியாபாரம்; எதுவும் இங்கே எளிதல்ல, முயன்றால் முடியாததில்லை.

கூட்டுறவு சங்கங்கலெல்லாம் பூட்டுகளை போட்டுக்கொண்டன
நல்லவன் இங்கே நாட்டுக்குழைக்க காணவில்லை,
கொள்ளையடிக்க கூட்டாய் சேர்கிறார்கள் இதில் அரசியல் வேறு
ஆணியை இவர்கள் புடுங்கவே வேண்டாமே!

ஆரோக்கியமாக ஒரு யோசனை, நம்மவர்களில் நல்லவர்களை திரட்டுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல கூட்டுறவு செய்வோம் நிதியை திரட்டுவோம்
அது மட்டும் போதாது ஒவ்வொரு காலாண்டும் லாப நட்டம் கணக்கிடுங்கள்
நிதியை மேற்பார்வை செய்யுங்கள் மூலதனம் மேம்பாடடைய அது முக்கியம்.

சிறு குறு தொழில்கள் ஏன் விவசாயம் கூட ஒழுங்குமுறையில் மேம்பட
நிதி வேண்டும் மதி வேண்டும் நிர்கதியில் கிடப்பவனை உயர்த்த கூடுவோம்
இந்த நாட்டின் வளங்கள் எங்கெங்கும் கவனிக்கப்படாமல் கொட்டிக்கிடக்கிறது.
உழைக்க இங்கே கோடிக்கணக்கில் உருப்பட ஒருங்கிணைக்க ஒருவருமில்லை.

கஜினிக்குப்பின் இங்கே வந்தவன் எல்லாம் சளைத்தவனில்லை
ரஜினியைத்துதித்து நாசமாய்ப்போனவன் எங்க ஊர் அறியா இளைஞன்
கட்சிக்காக வேஷம் காசுக்காக கூக்குரலிடுகிறான் மதுவில் மயங்குகிறான்
மனிதர்களை வழிநடத்த இங்கே மகான் எல்லாம் தேவையில்லை

பாமரனுக்கு தேவைகளை பார்த்துப்பார்த்து ஊழியம்
செய்பவன் எல்லோரும் நலமாகலாம்
இல்லை இங்கே எல்லாமே தவறாகலாம்.
பதவியில் இருப்பவனை நம்பி இருந்தால் பச்சைத்துரோகம் தான் மிஞ்சும்
பரமாத்மாவை நம்பி கோயிலிலும் வீட்டிலும்
அண்டி இருப்பவன் சுண்டித்தான் போவான்,

கண்டித்து வளர்ப்போம்,
காக்க வேண்டும்
அழிவது தொழில்கள் மட்டுமல்ல
குடும்பங்களும் குதூகலமும் தானே!

எழுதியவர் : செல்வமணி (24-Sep-16, 10:51 am)
பார்வை : 100

புதிய படைப்புகள்

மேலே