முக நூல் போதை நீக்கு மையம்
FB De-addiction Centre
(முக நூல் போதை நீக்கு மையம்)
========================================
எப்படி குடி ஒருவனை அடிமைப் படுத்துகின்றதோ, அது போல் கைப்பேசி (smartphone) மூலம் அடிக்கடி முகனூல் பார்க்கும் பழக்கமும் நம்மை சிறிது சிறிதாக அடிமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.
கூடுதலாக குறுஞ்செய்தி (messaging), வாட்ஸ்ஆப், மின்னஞ்சல், பொருட்கள் வாங்குதல், வங்கிக் கணக்கு அணுகுதல், டிக்கட் புக் செய்தல் (சினிமா, நிகழ்சி, இரயில், பேருந்து), செய்திகள், கூகுளுதல், புகைப்படம் எடுத்தல் எல்லாம் கைக்குள் அடங்கும் வசதியில் இருப்பதால், அதை அடிக்கடி எடுத்துப் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமை ஆகி விடுகிறோம். (இந்தக் 'கூடுதலாக' இல்லாமலேயே முக நூலால் ஒருவித மயக்க நிலைக்குத் தள்ளப்படுகிறோம்)
இவ்வாறு அடிக்கடிப் பார்ப்பதில் எந்தக் கூடுதல் தகவலும் நமக்கு வந்துவிடாது எனினும் அந்தப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் நம்மை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.. இப்பழக்கத்தினால் மற்ற வேலைகளிலும் ஊன்றிச் செய்யும் திறனும் குறைந்து விடுகிறது. மேலும் வேறு வேலை இல்லாதவற்கு இது ஒருவித வியாதியாகி விடுகிறது.
ஒற்றைக் கையால் கைப்பேசியைக் கட்டை விரல் கொண்டு இயக்குதல் கட்டைவிரல், மற்ற விரல் மூட்டுக்களுக்கு வலி தந்து தசைகளும் தளர்கிறது. நடமாடாமல் ஓரிடத்தில் இருப்பது கூடுதலாக மற்ற உருப்புகளுக்குத் தளர்வைத் தந்து நாளடைவில் செயலிழக்கச் செய்கிறது.
இதனுடன் எழுதும் பழக்கம் உள்ளவர்கள், வழக்கமாக எழுதிப் பதிவு போடுபவர்கள் தங்கள் பதிவுகளை யார், யார் விரும்பினார்கள், என்ன கருத்திடுகிறார்கள் என்ற ஆர்வத்துடன் அடிக்கடிக் கைப்பேசி காண விழைவர். நாளடைவில் இது ஒரு போதை போல் பற்றி நம்மை ஆட்கொண்டு விடுகிறது.. கூடுதல் ஊக்க போனஸாக கண் எரிச்சலும், ஒருவித மந்த கதியும் ஏற்படுகிறது..
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் இந்த நோயால் தீவிரமாகப் பாதிக்கப் பட்டுள்ளேன்.
அதில் இருந்து விடுபட விரும்புகிறேன்..
எப்பொழுதும் ஒன்றைப் பொதுவெளியில் சொல்லிவிட்டால் அதைக் கடைபிடிக்க வேண்டும் என்ற தார்மீக(!) பயம் இருக்கும்... அதன் முதற்கட்ட நடவடிக்கை இது...
அதற்கான மேலும் சில நடவடிக்கைகள் கீழே!
1. நான் எப்பொழுதும் நேரடியாகக் கணினியில் பதிவிடும் வழக்கம் உடையவன். இனி காலை ஒரு வேளை மட்டும் பதிவிடுவது என்ற முடிவு. மற்ற நேரங்களில் சிந்தனை பெருக்கெடுத்து கட்டுக்கடங்காமல் ஓடினாலும் பதிவிடுவதில்லை. பென்சில்/நோட் உதவியுடன் எழுதி வைத்துக் கொள்வது.
2. ஆரம்பக் கட்டமாக கைப்பேசியை மனைவியிடம் கொடுத்து ஒரு மணி நேரம் திருப்பித் தரக் கூடாது என, கைப்பேசியிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து இருத்தல் (அழைப்பு வந்தால் விலக்கு)
3. இப்பொழுது 24 / 7 / 365 wi-fi 'on'ல் இருப்பது விடுத்து, சில மணி நேரம் 'off' செய்து வைப்பது.
4. ஃபோனை பாட்டரி சேவிங்க் மோடிலோ, சைலன்ட் மோடிலோ வைத்து நோடிfication வருவதை மறைப்பது..
5. அக்கம் பக்கம் செல்லும்போது (கடைத் தெரு, நடைப் பயிற்சி) ஸ்மார்ட் ஃபோனைத் தவிர்த்து, மனைவியின் சாதா ஃபோன் கொண்டு செல்வது..
6. ஏதாவது ஒரு மாற்றுப் பழக்கம் தீவிரமாகக் கொள்வது.. (படிப்பது, பாட்டு கேட்பது...)
7. வாழ்த்துகள் / பிரபலமானவர் பதிவுக்குப் கருத்துப் போட்டால் அப்பதிவின் 'Notification off ' செய்து அவர்களுக்கு வரும் கருத்துக்கள் நம்மை எழுப்புவதைத் தவிர்ப்பது..
ஆரம்பித்தாகிவிட்டது.... பார்ப்போம்..
உங்கள் கருத்துக்கு இனி உடன் 'லைக் / பதில்' வராது....
ஆனா..... வரும்...
----- முரளி