சூரியன் தொலைத்த பறவை

இரவில் வந்தாலென்ன பகலில் வந்தாலென்ன
ஏழு வண்ண வானவில் எந்தன் வானத்தில்
எப்போதும் எந்தன் விழிகளில் இருட்டின் வண்ணம்தான்
என் பாட்டோடு சொல்வதெல்லாம் மனதின் எண்ணம்தான்
*
கருவறையும் இருட்டுதான் கல்லறையும் இருட்டுதான்
கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
எங்கள் காலத்தின் பயணமும் இருட்டுதான்
*
மழையின் வண்ணம் குளிர்கிறது
வெயிலின் வண்ணம் சுடுகிறது
மலரின் வண்ணம் மணக்கிறது
வண்ணம் தொலைத்த விழியின் வாழ்வு
வங்க கடலாய் கரிக்கிறது
*
சூரியன் தொலைத்த பறவையெல்லாம்
எங்கு சென்று இரைத் தேடும்
சிறகிருந்தும் பறக்காமல் கூட்டுக்குள் அது வாடும்
சோகங்களை தினம் பாடும்
*
எத்தனை எத்தனை துன்பங்கள் உலகில்
எதுவும் பார்வையில் பட வில்லையா
இறைவா நீயும் எந்தன் ஜாதியா
இல்லை இதுதான் உந்தன் நியதியா ?
*
வெள்ளை மனதின் வண்ணம்
விரல் பிடித்து உதவுகிறது
பிள்ளை மனதின் வண்ணம்
பசிக்கு உணவை தருகிறது
உள்ளம் பாடும் சுரங்களில்-இங்கே
உதவும் கரங்கள் நீள்கிறது
வெள்ளமென மழையாய் விழிகள் நன்றி பொழிகிறது
*
நிலம் தின்றால் புழுவாவாய் மனிதா
நெருப்பு தின்றால் சாம்பலவாய்
காலம் முடிந்து போகும் வேளை
கண் தந்து போனால் நீயும்
கண்ணில்லா மனிதர்கெல்லாம் காலமெல்லாம் கடவுளாவாய்
கண்தர மறந்தாலும் கவலையில்லை மனிதா
காலத்தின் இருட்டினில் காலிடறும் வேளை
கை தந்தால் போதும் நீயும்
காலமுள்ள காலம் வரை
என் நேசம் உன்னுடன் நீளும். ..
*
விழியின் கதவடைத்து ஒளி பறித்தாலும்
விதியில் பழி சுமத்தி வீழ்வதில்லை நானும்
வலியை நான் கடக்கும் வழி தந்தால் போதும்
வாழ்க்கைச் சாலையிலே விரைந்திடுவேன் நானும்
வானம் வசமென்றே வென்றிடுவேன் நாளும்..

எழுதியவர் : மணி அமரன் (24-Sep-16, 3:36 pm)
பார்வை : 239

மேலே