விழுதைத் தேடும் வேர்கள் - கவியரங்கம்

விழுதைத் தேடும் வேர்கள் !!!! - கவியரங்கம்

தமிழ் வாழ்த்து

தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தாள்பணிந்து வணங்குகின்றேன் .
நோய்தன்னை நீக்கிடவும் நோகாமல் தாய்மொழியை
வாய்திறந்துப் பேசிடவும் வகையாக வனைந்திடவும்
தாய்போல நமைக்காக்கும் தமிழ்மொழியே நீவாழ்க !!

பாவலரை மறவோமே ---- அவையடக்கம்

சோலைதனில் கவியரங்கம் சோர்வுநீங்க நடத்துகின்றார் .
காலைதனில் எழுந்தவுடன் கருத்தாகக் கற்பிப்பார் .
வேலையது பலவரினும் வேண்டுவன பயிற்றுவிப்பார் .
பாலைதனில் நின்றிடினும் பாவலரை மறவோமே

பைந்தமிழ்ச் சோலையில் பா வனைவோம் !!!

சோலையிலே நின்றிருந்தேன் சோகம் தீர்க்கச் சொல்லுமொழி பைந்தமிழே என்ற லுண்மை .
காலையிலே முகநூலில் காணு கின்றேன் காவியமும் படைக்கின்றார் மரபைச் சார்ந்து
பாலையிலும் பாட்டெழுத வைத்தா ராசான் பைந்தமிழின் மாமணியாம் மாற்ற முண்டோ?
மாலையிலும் மறவாது திருத்தம் செய்தே மரபுப்பா வனைவதற்குத் தூண்டும் கோலே .

பைந்தமிழின் சோலையிலே பசுமை கீதம் பைந்தமிழில் பாவெழுத ஆவல் கொண்டேன் .
செந்தமிழில் செங்கரும்பாய்ச் செழுமை மிக்கு செம்மையுடன் நானெழுத ஆவல் கொண்டே.
எந்நிலையில் சென்றாலு மென்றும் பேச எம்மொழியில் நித்தமுமே உயர வாழ்வு
சிந்தையிலே வைத்திதனை சிறப்பு செய்து சிறந்ததொரு தமிழ்மரபில் வனைந்தே னின்றே.








தலைமைக்கு வணக்கம் :-

நடுவருக்கு வணக்கத்தை நற்றமிழில் உரைத்திடவே
விடுகின்றேன் கவிதைவரி விடிவெள்ளி போன்றதொரு
படுகின்ற எழுத்துக்கள் பண்புடனே ஈர்த்துவிடும்
தொடுகின்ற வானுலகம் தொல்லுலகைத் தொட்டுவிடும் .

வெங்கடேசன் தலைமையிலே வெண்முகிலாய் நான்மாறி
உங்கள்முன் நின்றிங்கே உலகனைத்தும் கேட்டிடவே
அங்கமாகி விழுதினையும் ஆங்காங்கே தேடுகின்ற
எங்களினப் பெற்றோரே எந்நாளும் வேர்களன்றோ !!


விழுதைத் தேடும் வேர்கள் !!


வேர்களானப் பெற்றோரை வெற்றிடமே தள்ளிவிட்டு
மார்த்தட்டிக் கொள்ளுகின்ற மக்களினம் விழுதுகளாம்
பாரினிலே இந்நிலையே பன்னாளும் இருந்துவிட
ஊருராய்த் தேடுகின்றார் உண்மையிலே வாடுகின்றார்.

உள்ளொன்று வைத்திருப்பார் உண்மைநிலை வேரோன்றே
பள்ளமான குழியினிலே பக்குவமாய்த் தள்ளிடுவே
கள்ளமான நடந்திடுவார் காசினியில் சொத்திற்காக .
வெள்ளம்போல் வேர்களுமே வேகமாகப் புரிந்துகொள்ளும் .

பொய்யான வார்த்தைகளும் பொய்த்துவிடும் இவ்வுலகில்
மெய்யான வார்த்தைகளே மெய்பிக்கும் உண்மைநிலை
வெய்யோனின் சீற்றம்போல் வெற்றுரையாய்ப் பேசிடுவார்
உய்வில்லை எந்நாளும் உணர்ந்திடுவோம் எல்லோரும் .


வாக்கினிலே உண்மையிலை வழக்கிற்கே இடமுண்டாம் .
காக்கின்ற கல்வியையும் கணப்பொழுதில் காழ்ப்புணர்ச்சி
தீக்கதிரால் கக்கிடுவார் தீச்சொற்கள் ஈங்கிவரே .
சாக்குகளும் பலசொல்வார் சங்கடங்கள் செய்திடுவார் .


அனுபவத்தில் சொல்லியதே அனைவர்க்கும் பொருந்துவதே
அனுதினமும் மனஉளைச்சல் அகங்காரம் கொண்டோரால்
மனுநீதியும் சொல்லிடவே மானிடர்கள் இல்லையினி .
கனுவெனவும் இனித்திடுமோ காசினியில் எனதுள்ளம்



மாற்றமில்லை என்மனத்தில் மறவாது என்றனுள்ளம்
சீற்றமில்லை நெஞ்சத்தில் சீர்பெறவும் வாழ்ந்திடவே.
ஊற்றாக விழுதுகளும் உதவிடுங்கள் எந்நாளும்
காற்றாக மாறிநீங்கள் காத்திடுவீர் பெற்றோரை .


அடிமையென வாழ்வதற்கே அகிலத்தில் தன்மானக்
கொடிதனையும் குணமாகக் கொண்டவர்கள் வரமாட்டார் .
மிடிநிறைந்த இவ்வுலகில் மீண்டிடுங்கள் பெற்றோரே
செடிநிறையச் சொந்தங்கள் சேவைசெய்வார் விழுதுகளாய்


மதிப்பாக மதிக்கின்ற மானிடர்கள் உள்ளவரைக்
கதியாகப் பெற்றோரும் கடவுளென உள்ளவரைப்
பதித்திடுவேன் இக்கருத்தை பாரினிலே நானென்றும் .
மதிபோன்ற அழகுநிறை மங்கிடாது மண்ணுலகம்.

விழுதுகளைத் தேடுகின்ற விந்தையான இவ்வுலகில்
அழுத்தமாகச் சொல்லுகின்றேன் அன்புடைய வேர்களையும்
செழிப்புடனே காத்திடுவர் சேர்ந்திடுவீர் மக்களிடம்
தழைக்கின்ற ஆலமரம் தந்திடுமே நிழல்தன்னை.

நன்றியுரை :-


நன்றிசொல்ல வார்த்தையில்லை நற்றமிழர் சபைதனிலே
குன்றிமணி போன்றநானும் குறையறிவே கொண்டவளே
சின்னவளாம் எனைநீங்கள் சிறப்புப்பெற வைத்திடவே
மன்றினிலே எனைஎற்றி மகிமைதனைப் பெறச்செய்தீர் !


நன்றி !!! வணக்கம் !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Sep-16, 3:57 pm)
பார்வை : 87

மேலே