விதியும் மதியும்
இன்பம் வந்தபோது
ஆனந்தக்கூத்தாடி
களிநடம் புரிந்தது மதி
இன்பம் நீக்கி
துன்பம் தந்து
துடிதுடிக்க வைத்து
வேடிக்கை பார்த்தது விதி
துன்பம் வந்த போது
கலங்கித் தவித்து
கதறி அழுதது மதி
அவலம் நீக்கி
உவகை ஊட்டி
பார்த்து சிரித்தது விதி
நாட்பட நாட்பட
இன்ப துன்பம்
இரண்டையும்
ஒன்றெனப்பார்க்க
நன்றாய் கற்றது மதி
தன் விதி முடிந்தது
ஈங்கென்றெண்ணி
தன்விதி நொந்து
விதிவழி சென்றது விதி