கவிதை 124 மழைத்துளி முகத்தினில் பட்டதும்

சின்னஞ்சிறு மழைத்துளி முகத்தினில்பட்டதும்
கண்மூடி உலகை ரசிக்கின்றான்
இருகரம்குவித்து முடிந்தவரை பிடிக்கின்றான்
குதூகுலமாய் அவளை நோக்கி வீசுகின்றான்

குடுகுடுவெனஓடி காகித கப்பல்செய்து
ஓடும் நீரில் விடுகின்றான்
தட்டுத்தடுமாறி கப்பல் செல்கையிலே
மழலைபோல் மீண்டும் ரசிக்கின்றான்

திகைத்து நிற்கும் அவள்கரம்பற்றி
தரதரவென மழையில் இழுக்கின்றான்
சிலிர்த்து ஓடும் அழகு கண்டு
முதுமையை அவன் மறக்கின்றான்

சட்டெனெ ஓடிவேகமாய் மணல்தனில்
சின்னஞ்சிறு வீடு கட்டுகின்றான்
படபடவென வந்த மழையில்
வீடும் கரையும் நிலைகண்டான்

அத்தைமகளுடன் மணல்தனில் வீடுகட்டி
இலைதழையுடன் ஆக்கிய சோற்றை
அப்பாஅம்மையாய் விளையாடிய காட்சி
மின்னலாய் தோன்றி மறைந்ததுவே

மழை விழுந்த கோலத்தில்
சிதைந்து நிற்கும் புள்ளிகள்போல்
காலத்தின் கோலத்தால் கரையாத
கோலமாய் முகம்பார்த்து நின்றனரே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (26-Sep-16, 11:00 am)
பார்வை : 82

மேலே