வாழ்க்கைப் பாடல்
பதவியெனும் மமதையினால் பழசையெல்லாம் மறந்துவிட்டு
உதவியென்று வந்துநிற்கும் உறவையெல்லாம் வெறுத்துக்கொண்டு
கதவடைக்கும் கயவர்களே.. கண்திறந்து பாருங்களே...
பிறவிக்காக உயிர் நமக்கு
இறைவன் போட்ட பிச்சை . அதை
பிடுங்கிக்கொண்டு போனபின்னே
என்ன உண்டு மிச்சம்?
உயிரிருக்கும் வரையினிலே உடனிருபோர் கூட
உயிர்பிரிந்து போகையிலே வருவதில்லை கூட.. (பிறவி)
மனிதன் கொண்ட தனியுடமைத் தனத்தால்
மண்ணில் வெட்டுக் குத்து
மரணம் என்னும் பொதுவுடைமை அழைத்தால்
நாம் மயானத்தின் சொத்து
கண்ணை மூடிப் போகும்போது
என்ன கொண்டு போவோம்
கையைக் கூட விட்டுவிட்டு
காற்றாய் தானே ஆவோம்
காற்றாய் ஆகும் நாளில்
பிறர் சுவாசமாக ஆவோம் (பிறவிக்காக)
கருணை நிறைந்த உள்ளமென்ற பேரை
வாங்கி விட்டுப் போனால்
கடவுள் வாழும் உலகத்திலே நாமும்
குளிக்க லாமே தேனால்
கிடைத்த இந்த வாழ்வை நாமும்
பிறருக்காக வாழ்வோம்
பிறருக்காக வாழும் வாழ்வை
பெருமை என்று கொள்வோம்
மனிதம் கொண்ட மனிதனாய்
மரணத்தாலே வாழ்வோம் (பிறவிக்காக)
*மெய்யன் நடராஜ்