அழகிய அரும்பே

எட்டிப் பார்க்கும் சுட்டிப் பெண்ணே
கட்டிக் கரும்பே அழகிய அரும்பே !

சிரிக்கும் அழகு சிந்தையைத் தொடுகிறது
சிதறும் உள்ளமும் சிரித்து மகிழ்கிறது !

உதிர்த்திடும் புன்னகை எனக்குப் புரிகிறது
உலகை நினைத்து உனதுள்ளம் சிரிக்கிறது !

கள்ளமிலா உன்முகத்தை கணநேரம் கண்டதும்
கவலைகள் மறக்கிறது கருணையும் பிறக்கிறது !

நந்தவனமாய் மணக்கிறது நளினிமிகு உன்னழகும்
வந்தனம் செய்கின்றேன் வானவில்லே உனக்கும் !

கோபமது உன்முகத்தில் காட்சிக்காக நின்றதா
கோமாளி உலகத்தைக் கண்டதன் நிலையதா !

அமைதியின் உருவமாய் நிற்பதும் தெரிகிறது
அலைமோதும் ஆசைகளை விழிகள் கூறுகிறது !

வாசலில் நிற்கிறாய் வசந்தத்தை வரவேற்க
வாழ்த்திடும் காலங்கள் வரிசையாய் வந்திடும் !

வளர்ந்திடு வளமுடன் நானிலத்தில் நலமுடன்
வாழ்ந்திடு புகழுடன் வாழ்வாங்கு வையகத்தில் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Sep-16, 9:08 am)
பார்வை : 1673

மேலே