விரும்பிடும் உளமே

விரும்பிடும் உளமே

மூடிய முகிலுள் மோகன நிலவாய்
****முத்தென ஒளிரும் மோகினி இவளோ ?
சூடிய மலரும் சொக்கிட வைக்கும்
****சுந்தர வதனத் தோகையின் சிரிப்போ ?
பாடிடும் குயில்போல் பாவையின் குரலும்
****பைந்தமிழ்ச் சுவையாய்ப் பரவிடும் மதுவோ ?
ஆடிடும் மயிலாய் அபிநயம் புரியும்
****ஆயிழை அழகில் அசைந்திடும் மனமே !

வளைகரம் கொஞ்ச வஞ்சியும் சிணுங்க
****வளைவுகள் வனப்பாய் வதைத்திடும் இடையோ ?
முளைவிடும் குருத்தாய் முந்திரி விதையாய்
****முகத்தினில் எடுப்பாய் முகிழ்ந்திடும் மூக்கோ ?
இளைஞரை யீர்க்கும் இமைத்திடும் விழியும்
****இதழ்களின் சிவப்பும் இளமையின் துடிப்போ ?
விளைந்தநெற் கதிராய் வெண்மணி யாரம்
****மின்னிடும் பெண்ணை விரும்பிடும் உளமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Sep-16, 10:50 pm)
பார்வை : 79

மேலே