தலைவனைக்கண்ட தலைவியின் நிலை-கங்கைமணி
காதலர் எதிர்வர
கடைக்கண் பார்க்கும் - அவர்தம்
நடைகண்டு ரசிக்கும் .
காதல் மேவலில்.,
கருவண்டு நிறம் கூட
கண்ணுக்கு அழகாகும்.
காந்தத்தின் ஈர்ப்பெல்லாம்
கண்ணீர்ப்பில் தோற்றுவிடும்.
காற்றோடு கார்குழல்
கலைமேகம் போலாகும்.
தவிப்போடு தாவணி
தல்லாடும் நிலைவரும்.
ஏக்கம் முளைவிடும்
எட்டிப்பார் எனச்சொல்லும்.
கொட்டிக்கவிழ்த்துவிட
கொண்ட ஆசை குதிக்கும்.
உணர்வுகள் ஊற்றெடுத்து
உந்தித்தள்ளும்.
கருவிழி நிலையாது
கண்டபடி செல்லும்.
இடை நெளியும்
உடையெல்லாம் உடையும்.
கனத்தபொருளெல்லாம்
கடைவிரிக்க ஏங்கும்.
நெஞ்சில் பெருமூச்சு
நெருப்பள்ளி வீசும்.
உமிழ்நீர் அமுதாகும்
ஆலிங்கனம் நினைவாகும்.
உதிர்ந்த சருகு
காற்றிற்கு சிறகாகும்.
உதிர்ந்த மனது
உறவிற்கு தோதாகும்.
இருந்தும்...,
நாணம் தடைபோடும்.
நங்கை மனம் வாடும்.
தடையேற்று தவிப்போடு
தலைவன் போகும்திசை,
தலைவி கண்டிருக்க...,
கண்ணீர் குடமுடைந்து
கன்னக்கரை பெருகும்.
கன்னியர் நிலை இதுவே!
காணக்கிடைத்தும்
கலவமுடியாத
கற்பு நெறி.
வெட்கம் கழட்டி...
வேள்வியைத்தொடங்காது,
விருப்பம் எடுத்து
விருந்தினைப்படைக்காது.
தடை போட்டுத்தடுத்து
தன்னிலை உணர்த்தும்.,
நாநிலம் வியக்கும்.,
நலினப்பெண்களின்
நாணத்தைப்போற்றுவோம்.!
-கங்கைமணி