அன்பெனும் நதியினிலே
----------------------------------------------------
அன்பெனும் நதியினிலே
அளவிலா இன்பமுடனே
நீந்திட்ட நினைவுகளுடன்
நீண்டதொரு அனுபவமும்
அடியேன் எனக்குமுண்டு
மறவேன் மறையும்வரை !
அன்பெனும் அருங்குணம்
அளித்திடும் இன்பத்தையே
மீட்டிடும் யாழினைப்போல்
மயக்கிடும் மனங்களையும்
இதமாக்கும் இதயங்களை
மறுத்திடும் மனிதருண்டோ !
உள்ளத்தில் தூய்மையுடன்
உறவுகளிடம் உண்மையுடன்
நட்புகளிடம் பகைமையின்றி
நடத்தையில் நன்னெறியுடன்
நடைபோடும் உள்ளங்களில்
அருவியாகும் அன்பென்றும் !
அலைமோதும் உள்ளமதில்
அமைதியும் நிலைகொள்ள
உற்சாகமும் பெருக்கெடுக்க
அன்பெனும் நதியினிலே
வாழ்க்கையெனும் படகிலே
பயணிப்போம் மகிழ்ந்திருக்க !
-----------------------------------------------------
பழனி குமார்