விழுந்தாலும் விதையாகிவிடு
விழுந்தாலும் விதையாகிவிடு...
தரையெங்கும் இரத்த ஆறு வெள்ளமாய்
பெருக்கெடுக்க...
மனித தலைகள் மலை போலே குவிந்து
கிடக்க....
மனமெங்கும் உயிர் போகும் அச்சம்
உறைந்திருக்க...
கனன்று கொண்டிருந்த ஆயுதங்களில்
சிக்கி...
மண்ணுக்குள் புதைந்து போனது
பல உயிர்கள்....
விழிமூடி துயில் கொள்ள நேரமில்லை
கண்முன்னே உயிரொன்று துடித்தாலும்
அவன் உயிர் காக்க வழியில்லை...
தன் விழிநீர் மண்ணை அடையும் முன்
அவனோடு துணைபோகவே
முடிந்தது விண்ணகம் வரை...
அனைத்திற்கும் விடியாத முடிவு
வந்தது ஒரு நாள்...
அன்றோடு உறங்கிப்போனது
உரிமைப்போராட்டங்கள்....
பதுங்கு குழிகளுக்குள் புதையுண்டு
மறைக்கப்பட்டது பல உண்மைகள்....
மண்ணோடு மண்ணாக்கப்பட்டு
மண்ணுக்குள் மடிந்தது
ஈழத்தமிழர்களின் சுவாசங்கள்....
வீழ்ந்த உயிர்களும் முளைத்து
எழுந்திடுங்கள் விதைகளாய்....
மீண்டும் நம்முடன் இணைந்தே
ஒன்றாய் குரல் கொடுத்திடுங்கள்..
ஈழத்தமிழனின் விடுதலைக்காய்...
-உதயசகி-