அம்மா இங்கே வா வா

சாமி பார்த்த சந்தோஷத்தில்
நேர்த்தி கடன் பூர்த்தியானதில்
துலாபார வேண்டுதல் நிறைவேறியதில்
இந்திய வருகைக்கு அர்த்தங்கிடைத்ததில்
பட்டு சேலை வெட்டியும் பூர்வீகம் கண்டதில்
மகிழ்ச்சியில் பெற்றோர் இன்புற்றிருக்க

பட்டு பாவாடை ரவிக்கை உடுத்தி
சின்னதொரு ஜடை தச்சி
மல்லிச்சரம் அதில் தொடுத்து
தங்ககுஞ்சமதை கீழே தொங்கவிட்டு
காதுமடல் பொன்னில் மின்ன
குட்டி ஜும்க்கி குளுங்கி சிரிக்க
நெற்றிக்கு வண்ண திலகமிட்டு
கண்ணுக்கு கருமை தீட்டி
கண்ணக்குழியில் திருஷ்டிக்கு பொட்டிட்டு
தங்கவள கை நிரப்பி
குட்டி தேவதையாய் கூட்டிவந்தாயே!

வீதியிலே கட பரப்பி
பாசிமணி, ஊசிமணி,
முத்துமணி, பவழமணி
சரம்சரமாய் கண்பரிக்க
காற்றில் இசைக்கும் கண்ணாடி வள
வர்ணங்களில் ஜொலிக்கும் மர வள
பட்டுநூல் போர்த்திய நூல் வள
எல்லாம் பக்கம்வாவென பார்வையால் பரிந்துரைக்க

பஞ்சு மிட்டாய் வாங்கலையோ சத்தத்தில்
அண்ணார்ந்து பார்க்கையில் அதிசயம் கண்டேன்
அப்பாவிடம் ஆசை கூறி
கடிகார மிட்டாய் கையில் கொண்டேன்
பால் ஐஸ், பன்னீர் சோடா,
தேன் மிட்டாய், தேங்க மிட்டாய்,
கடல மிட்டாய், கமரகட்
எல்லாம் எட்டி பார்க்க
கண்சிமிட்டாமல் வாய் பிளந்தேன்
ஆடி திருவிழா அமோகமாய் அரங்கேர

நிமிர்ந்தால் தலைகளும்
குனிந்தாள் கால்களுமாய்
எங்கும் கோலாகளம் கொப்பளிக்க
எப்படி அம்மா உன்னை தொலைத்தேன்?
கை நழுவி போனபின்
கண்மணி நான் தொலைந்ததனால்
கதறி கதறி அழுதாயோ!
வீதியெங்கும் அலைந்தாயோ!
என் கண்மணி காணவில்லை என
முன்னணி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தாயோ!
குக்கிராமங்களில் முன்னணிகளுக்கு வேலையில்லை யம்மா

பச்ச புடவைய நான் தேட
சிகப்பு சட்டையெல்லாம் என் அப்பாவாக
என் மையிட்ட கண்கள் சிவந்து
முகமெங்கும் பயம் தெறிக்க
மேளங்களின் ஓசையில் என் அழுகுரலும் சேர்ந்தொளிக்க
அரவணைக்க ஆளில்லாமல் அழுததை யார் அறிவார்?

அம்மாவிடம் கூட்டிப்போறேன்னு
காது கழுத்தில் மின்னியதை
தன் கைப்பைக்கு இடமாற்றி
குஞ்சமதை அவிழ்த்து
என் கண்ணெதிரே ஒளித்து
வளவிகளை வாங்கி
திட்டமிட்டு மறைத்து
தொ வரேன் அம்மாவுடனென
நிர்கதியாய் தனிமையில் விட்டாலே
நீல சேலை நயவஞ்சகி
என் கடைசி மூச்சுள்ளவரை
மனமுன்னை மறவாதே!

வருடங்கள் நான்கு உருண்டோடியாச்சு
கற்பகம் பாட்டியின் ஆதரவில்
அழுது சலித்த தேகத்தை
அள்ளி அனைத்து வருடினாள்
அம்மா உன்னிடம் வருவா
அழாதே கண்மணி அழாதே
கூழோ கஞ்சியோ சேர்ந்துண்டோம்
கைத் தொழில் ஒன்றை கற்பித்தாள்
காலம் கண்ணுக்கெட்டாமல் சென்றது

மூங்கில் ஈர்கெடுத்து
சாயம் தோய்த்து
உலர்ந்த பிறகு
வண்ண வண்ண
கூடை, தட்டு
பாய், முறம்
விதவிதமாய் பின்னுவேன்
மூன்றுவருட எதிர்பார்ப்பு
அம்மா, உன்முகம் காண
என்னிடம் கூடை வாங்க வா மா
ஆடித்திருவிழாவின் ஒரே நோக்கம்
அம்மா உன்னை கண்டெடுப்பதே

அமெரிக்க வாழ்க்கை காற்றுத்தந்த
நுனிநாக்கு ஆங்கிலம் பட்டுபோனது
அனுபவ வாழ்க்கை கற்றுத்தந்த
வட்டார தமிழ் பழகிப்போனது
எதிர்பார்ப்பை ஏமாற்றாதே அம்மா
இம்முறையெனும் உன்னை பார்க்கனும்
என்னை உன்னோடு கூட்டிப்போக
நிச்சயம் வரனும் நீ
கற்பகம் பாட்டிக்கு பாஸ்போர்ட் வேண்டுமே
மறவாமல் அப்பாவிடம் சொல்லிடு

அம்மா வாங்க ஐயா வாங்க
கூட வாங்கலையோ கூட கூட
பூ கூட, வெங்காய கூட
முறம், தட்டு, தொப்பி, கோப்பை
இன்னும் இருக்கு ஏராளம்
வாங்கம்மா வாங்க!
அம்மா வாங்க ஐயா வாங்க!

எழுதியவர் : arunmozhi (6-Oct-16, 9:19 pm)
சேர்த்தது : அருண்மொழி
Tanglish : amma ingey vaa vaa
பார்வை : 100

மேலே